ஆனந்த கண்ணன் அருமையான மனிதர், கலைஞர், கடுமையான உழைப்பாளி - உள்ளூர் பிரபலங்கள்
ஆனந்த கண்ணன் அருமையான மனிதர், கலைஞர், கடுமையான உழைப்பாளி - உள்ளூர் பிரபலங்கள்
படம்: Facebook/Anandha Kannan
மறைந்த சிங்கப்பூர் கலைஞர் ஆனந்த கண்ணன் அருமையான மனிதர், கலைஞர், தம்மை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்பவர் என்று உள்ளூர் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆனந்த கண்ணனின் திடீர் மறைவு குறித்து சில உள்ளூர் நட்சத்திரங்களிடம் "செய்தி" பேசியது.
ஆனந்த கண்ணனின் மறைவு சிங்கப்பூர் கலைக் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று அவருடைய நண்பரும் உள்ளூர் நட்சத்திரமுமான வடி Pvss தெரிவித்துள்ளார்.
பதின்ம வயதில் நாங்கள் எல்லாம் இணைந்து ரவீந்திரன் நாடகக் குழுவை உருவாக்கினோம். அந்த குழுவின் முக்கியத் தூணாக இருந்தவர் ஆனந்தக் கண்ணன்
அவர் ஒரு நல்ல கலைஞன் அருமையான மனிதன், மலேசியா, இந்தியாவிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அவரது புன்சிரிப்பு, அன்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. மரபுக் கலைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வந்தவர். அவர் நம்மை விட்டுப் பிரிந்தது சோகமானது என்று திரு. வடி Pvss கூறினார்.
ஆனந்த கண்ணன் பற்றிய தமது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார், உள்ளூர்த் தொலைக்காட்சி இயக்குநர், தயாரிப்பாளர் வெங்கடாச்சலம்.
30 ஆண்டுகளுக்கு மேல் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சி படைப்பதிலும் அனுபவம் கொண்டவர் ஆனந்த கண்ணன்.
விளையாட்டு, தகவல், கேளிக்கை, சமையல், பிரதான விழா, நேரடி விழா என அனைத்திலும் திறமையை வெளிப்படுத்தியவர்.
தமிழ்நாட்டிற்குச் சென்று அங்கு நடந்த பல பிரமாண்டமான நிகழ்ச்சிகளைத் தனியாகப் படைத்தார்.
பல முன்னணி நட்சத்திரங்களைப் பேட்டி எடுத்துள்ளார், அவர்களுடன் பணியாற்றியுள்ளார்.
முதல் நிகழ்ச்சியில் எப்படி ஆர்வமாக மரியாதையுடன் நடந்துக் கொண்டாரோ அதை இறுதி வரை ஆனந்தக் கண்ணன் கடைப்பிடித்தார்.
நல்ல மனிதர், அன்பானவர், கடுமையான உழைப்பாளி அவரின் மறைவு துயரமானது" என்று வெங்கடாச்சலம் வருத்தம் தெரிவித்தார்.
ஆனந்த கண்ணன் பெயருக்கு ஏற்றவாறு ஆனத்தமான மனிதர், நல்ல ஆசிரியரும் கூட என்றார் உள்ளூர்த் தொலைக்காட்சி இயக்குநர், தயாரிப்பாளர் மஞ்சு.
(படம்: Facebook/ Manju Balakrishnan)
தமிழ் மீதும் கலை மீதும் அளவில்லாப் பற்றுக் கொண்டவர், யாரையும் தவறாகப் பேசமாட்டார், மற்றவரை நோகடிக்கவும் மாட்டார்.
it's ok not to be ok என்று மன அழுத்தம் குறித்து தயங்காமல் சமூக ஊடகங்களில் பேசி விழிப்புணர்வூட்டியவர் என்றார் மஞ்சு.
மேடை நாடகம், பாரம்பரியக் கலைகளுக்காக அயராது உழைத்தவர். அதனால்தான் அவர் ஆயிரக்கணக்கான மக்களின் நினைவுகளில் இப்போதும் நீடிக்கிறார்.
நல்ல நண்பன், அவரது புகழ் கலைத் துறையில் என்றும் ஒலிக்கும் என்றார் நிகழ்ச்சிப் படைப்பாளர் GT மணி.
(படம்: Facebook/ GT Mani)
கலையில் அதிக நாட்டம் கொண்டவர், மக்கள் மீது அன்பு மழை பொழிபவர் ஆனந்த கண்ணன்.
சவால் சிங்கப்பூர் நிகழ்ச்சியில் அவருடன் வேலை செய்தது மறக்க முடியாத அனுபவம் அவரது சிரிப்பைக் கட்டாயம் நாம் மறக்கமாட்டோம் என்றார் நடிகர், நிகழ்ச்சி படைப்பாளர் சரவணன் அய்யாவு.
(படம்: Instagram/ Saravanan Ayyavoo)
ஆனந்த கண்ணனின் மறைவு துயரத்தை தருகிறது.
சிங்கப்பூர் கலைத் துறைக்கு பெரிய அளவில் பங்காற்றியவர்களில் ஆனந்த கண்ணனும் ஒருவர், அவர் இந்திய தொலைக்காட்சிகளில் ஒரு புதிய பாணியை உருவாக்கியவர்.
அவருடன் பேசி மகிழ்ந்த தருணங்கள் இனிமையானவை என்றார் பாடகர், இசையமைப்பாளர் முகமது ரபி.
(படம்: Instagram/ raffeemusician)
ஆனந்த கண்ணன் அன்பான மனிதர், 24 ஆண்டுகளாகப் பழக்கம் காணும்போதெல்லாம் "நண்பா எப்படி இருக்க?" என்று பாசத்துடன் கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்தக்கூடியவர்.
2004ஆம் ஆண்டில், நடிகர் நாசர் நடத்திய நாடகப் பட்டறையில் பங்கேற்றபின்,சாங்கி கடற்கரையில் அமர்ந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தது நினைவில் எழுகிறது. இனிய உரையாடல்களால்,கண்ணன் என்றும் நினைவில் நீங்காமல் இருப்பார் என்றார் ஒலி 96.8 படைப்பாளர் முகமது ரபி.
(படம்: Instagram/ shabirmusic)
(படம்: Instagram/ soundari)
உடல் நலப் பிரச்சினைகள் காரணமாக ஆனந்த கண்ணன் நேற்று இரவு காலமானார்.