மழை, ரயில் சேவைத் தடங்கல் - சிரமத்தில் பயணிகள்
நேற்று கிழக்கு மேற்கு ரயில் பாதையில் ஏற்பட்ட தடங்கல் இரண்டாவது நாளாக நீடிக்கிறது.
காலையில் மழை பெய்ததால் பூன் லே ரயில் நிலையம், ஜூரோங் ஈஸ்ட் ரயில் நிலையம் போன்ற இடங்களில் பல பயணிகள் சிரமத்தை எதிர்நோக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இன்று காலை ஜூரோங் ஈஸ்ட் (Jurong East) ரயில் நிலையத்திற்கும் புவன விஸ்தா (Buona Vista) ரயில் நிலையத்திற்கும் இடையே ரயில்சேவை இருக்காது என்று SMRT நிறுவனம் கூறியது.
பூன் லே- ஜூரோங் ஈஸ்ட் இடையே ரயில் சேவைகள் இருக்கும்.
அதேபோல் புவன விஸ்தா - குவீன்ஸ்டவுன் இடையிலும் ரயில் சேவைகள் இருக்கும் என்று SMRT தெரிவித்தது.
அத்துடன் ஜூரோங் ஈஸ்ட், புவன விஸ்தா இடையிலும் பூன் லே, குவீன்ஸ்டவுன் இடையிலும் இலவசப் பேருந்துச் சேவைகள் வழங்கப்படுகின்றன.
சிறப்புத் தேவையுடையவர்களைக் கவனத்தில் கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
புவன விஸ்தா ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்றுக் காலை முதல் கிழக்கு- மேற்கு ரயில் பாதையில் தடங்கல் ஏற்பட்டிருக்கிறது.
கிளமெண்டி (Clementi) நிலையத்துக்கு அருகே போய்க்கொண்டிருந்த ரயில் நின்றது. அதில் இருந்த சுமார் 850 பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி நடந்துசென்று நிலையத்தை அடைந்தனர்.