தேசியச் சேவையாளர் மரணம்: ஆண்டுக்குச் சராசரி 10-11 பேர் உயிரிழப்பு
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் கடந்த பத்தாண்டுகளில் ஆண்டுக்குச் சராசரியாக 10 முதல் 11 முழுநேரத் தேசியச் சேவையாளர்கள் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தேசியச் சேவையில் இருந்தபோது உயிரிழந்ததாகத் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.
தற்கொலை, சாலை விபத்துகள், நோய்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மரணங்கள் ஏற்பட்டன.
நாடாளுமன்றக் கேள்விக்கு எழுத்துபூர்வமாகத் தந்த பதிலில் அமைச்சர் அந்த விவரங்களைத் தெரிவித்தார்.
2016 முதல் 2025ஆம் ஆண்டுவரை முழுநேரத் தேசியச் சேவையாளர்களின் மரணத்துக்குத் தற்கொலை முக்கியக் காரணமாக இருந்தது.
அதற்கடுத்த காரணம் சாலை விபத்துகள்.
ஆண்டுதோறும் சிங்கப்பூரர்கள் நிரந்தரவாசிகள் என சுமார் 45,000 ஆண்கள் முழுநேரத் தேசியச் சேவையில் ஈடுபடுகின்றனர்.
ஆண்டுக்குச் சராசரியாக 4 முழுநேரத் தேசியச் சேவையாளர்கள் தற்கொலை செய்துகொண்டதாக அமைச்சர் கூறினார்.
ஒவ்வோர் உயிரிழப்பும் வருத்தமளிப்பதாகத் திரு சான் கூறினார்.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அவர் அனுதாபம் தெரிவித்தார்.
தேசியச் சேவையாளர்கள் முகாமில் அல்லது பணியின்போது மாண்டால் தற்காப்பு அமைச்சும் உள்துறை அமைச்சும் செய்தி வெளியிடுவது ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாக அவர் சொன்னார்.