Skip to main content
அன்றாடம் சடலங்களைப் பதப்படுத்தும் வேலை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

அன்றாடம் சடலங்களைப் பதப்படுத்தும் வேலை - "ஆத்மார்த்தமாக 50 ஆண்டுகளுக்கும் மேல் செய்தார் மறைந்த பாலகிருஷ்ணன்"

வாசிப்புநேரம் -
வேலையிடம் பலவிதம்....அலுவலகம், வீடு, தொழிற்சாலை - இப்படி நம்மில் பலர் பல இடங்களில் வேலை செய்வோம்.

சில வேலையிடங்களும் வேலைகளும் நம்மை ஆச்சரியப்படுத்தும்...இப்படியும் வேலை இருக்கிறதா என்று நம்மைச் சிந்திக்க வைக்கும்.

அவற்றில் ஒன்று சவக்கிடங்கில் சடலங்களைப் பதப்படுத்துவது...

மறைந்த திரு பாலகிருஷ்ணன் பெரியதம்பி எந்தவொரு தயக்கமுமின்றி 50 ஆண்டுகளுக்கும் மேலாக அன்றாடம் செய்த பணி.

சடலங்களைப் பதப்படுத்தி, உடல்களை அடக்கம் செய்ய ஏற்பாடுகளைச் செய்தவர். இயற்கை மரணங்கள் மட்டுமல்ல, அனைத்து விதமான மரணங்களுக்குப் பின்னரும் சடலங்களைக் கலக்கமில்லாமல் கையாண்டவர்.

திரு பாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாகப் புற்றுநோயால் அவதிப்பட்டார்...இம்மாதம் (மே 2024) 25ஆம் தேதி காலமானார்.

அவருக்கு வயது 73.

"வேலையை ஆத்மார்த்தமாகச் செய்தவர்"

இது சாதாரண வேலை அல்ல. இருந்தும் திரு பாலகிருஷ்ணன் வேலையிடத்தைத் தனது முதல் வீடாகக் கருதியதாகச் "செய்தி"யிடம் சொன்னார் அவரது மருமகள் ஷாந்தினி.

அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் ஷாந்தினி.

இறந்தவர்களுக்குக் கௌரவமான இறுதிச்சடங்கை நடத்துவதிலும் சடலங்களைச் சரியான முறையில் பதப்படுத்துவதிலும் அதிக அக்கறை காட்டியவர்.

உயிருடன் இருப்பவர்களையும் இறந்தவர்களையும் பாரபட்சம் இல்லாமல் மரியாதையுடன் நடத்துவது முக்கியம் என்று திரு பாலகிருஷ்ணன் நம்பினார்.

வாழ்க்கையைச், செய்யும் தொழிலுக்கு அர்ப்பணித்த அவருக்குப் பொதுச் சேவைப் பதக்கம் உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டதாகக் கூறினார் ஷாந்தினி.
படம்: ஷாந்தினி
"எல்லோரும் ஒருநாள் இறப்போம்... மகிழ்ச்சியாக இருப்போமே"

"வாழ்க்கையை எதார்த்தமாக வாழ்ந்து காட்டியவர். நகைச்சுவை உணர்வு கொண்டவர். வேலையிட உளைச்சலை அவர் ஒருபோதும் வீட்டில் காண்பித்ததில்லை. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்தார்," என்றார் ஷாந்தினி.

"மறைந்த பின்பும் பலரது மனத்தில் நிலைத்து நிற்கிறார்"

சவக்கிடங்கில் வேலை செய்ய தயங்கியபோது திரு பாலகிருஷ்ணன் தமக்குத் தைரியம் கொடுத்ததை நினைவுகூர்ந்தார் அவரது சக ஊழியர் ஷாமளா.

திரு பாலகிருஷ்ணனின் உடல் மின் சுடலைக்குக் கொண்டுசெல்வதற்கு முன்னர் அவர் பணிபுரிந்த சவக்கிடங்கிற்குக் கொண்டுசெல்லப்பட்டது.

அங்குத் திரு பாலகிருஷ்ணனின் சக ஊழியர்கள் கண்ணீர் மல்கத் திரண்டிருந்தனர்.

பலருக்கு வழிகாட்டியாக இருந்தவர் திரு பாலகிருஷ்ணன். எந்த வேலையைச் செய்கிறோம் என்பது முக்கியம் அல்ல; அதைச் சிறப்பாகச் செய்யவேண்டும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் என்று அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் "செய்தி"யிடம் பகிர்ந்துகொண்டனர்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்