Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

BTO வீடுகள் விரைவாகக் கட்டி முடிக்கப்படுவதால் அவற்றின் தரம் பாதிக்கப்படுமா?

வாசிப்புநேரம் -
தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் BTO வீடுகளுக்கான காத்திருக்கும் காலத்தைக் குறைக்க அரசாங்கம் முயன்று வருகிறது.

அடுத்த ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படக்கூடிய வீடுகளை அறிமுகம் செய்யப்போவதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் வீடுகளின் கட்டுமானத்தை விரைவுபடுத்துவதால் அவற்றின் தரம் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுகின்றது.

புதிதாகக் கட்டிமுடிக்கப்படும் வீடுகளின் உட்புறத்தில் உள்ள குறைகளைக் கண்டறியும் சேவைகளை வழங்கும் சில நிறுவனங்களை 'செய்தி' தொடர்புகொண்டது.

வீடுகள் சீக்கிரமாகக் கட்டி முடிக்கப்படுவதால் அவற்றின் தரம் குறையாது என்று Uncle Defect நிறுவனம் கூறியது.

"புதிய வீடுகள் நன்றாகக் கட்டப்படுகின்றன. அதனால் அவற்றின் தரம் பாதிக்கப்படாது என நம்புகிறோம்."

என்று அது சொன்னது.

கடந்த சில ஆண்டுகளாகத் தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகளின் உட்புற வேலைப்பாடுகளின் தரமும் மேம்பட்டிருப்பதாக Uncle Defect கூறியது.

இருப்பினும் குறைபாடுகளைக் கண்டறியும் சேவைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக SG Defect Scan நிறுவனம் தெரிவித்தது.

"கடந்த சில ஆண்டுகளாகவே இத்தகைய சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாகச் சென்ற ஆண்டு கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது."

என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இஸ்மாயில் குறிப்பிட்டார்.

வீடுகளின் உட்புறத்தின் தரம் குத்தகையாளர்களைப் பொறுத்துள்ளது என்று அவர் சொன்னார்.

"வெவ்வேறு திட்டங்கள் வெவ்வேறு குத்தகையாளர்களால் செய்யப்படுகின்றன. அதனால் வேலைப்பாடுகளின் தரமும் மாறுபட்டிருக்கும்."

"விரைவாக வேலையை முடித்துவிட்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் வீடுகளை ஒப்படைக்க அவர்கள் முற்படலாம். அதனால் தரம் பாதிக்கப்படலாம்."

என்று அவர் சொன்னார்.

மேலும் புதிய வீடுகளின் சாவியைப் பெற்ற நாள் முதல் ஓர் ஆண்டுக் காலத்திற்குள் வீட்டில் உள்ள குறைபாடுகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திடம் தெரிவித்தால், அவை இலவசமாக சீர்செய்து தரப்படும் என்று அவர் கூறினார்.

ஆனால் வீட்டின் புதுப்பிப்புப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பு குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவிக்கவேண்டும் என்று இஸ்மாயில் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்