2021 இல் மறைந்த சிங்கப்பூர்ப் பிரபலங்கள்
சிங்கப்பூர் 2021-ஆம் ஆண்டில், திறமையானவர்களில் பலரை இழந்தது.

(படம்: CNA)
சிங்கப்பூர் 2021-ஆம் ஆண்டில், திறமையானவர்களில் பலரை இழந்தது.
மறைந்த சில பிரபலங்கள்.....
- சிங்கப்பூர் தேசியக் குறிசுடும் வீரர் போ லிப் மெங் (Poh Lip Meng)
அவருக்கு வயது 52. குறிசுடும் போட்டிகளில் தேசியச் சாதனைகளைப் புரிந்தவர்.
தென்கிழக்காசிய விளையாட்டுகளில் குறிசுடும் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றவர்.
- சிங்கப்பூரில் தாள வாத்தியக் கருவிகளை வாசித்த முன்னோடிப் பெண்களில் ஒருவரான திருமதி மனுநீதிவதி முத்துசாமி
அவருக்கு வயது 88. சிறு வயதிலிருந்தே வாய்ப்பாட்டு, நடனம், இசைக்கருவிகள் எனப் பல்வேறு கலைகளில் நாட்டம் கொண்டவர். 1970கள் வரை, பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேடை நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், வானொலி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்துகொண்டவர்.
- பிரபல உள்ளூர் ஆங்கில வானொலிப் படைப்பாளரும், இசைக் கலைஞருமான கிறிஸ் ஹோ (Chris Ho)
வயிற்றுப் புற்றுநோயால் அவர் உயிர்நீத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. Mediacorp GOLD 905 வானொலியில் கிறிஸ் ஹோ படைப்பாளராகப் பணியாற்றியவர்.
- சிங்கப்பூரின் வானொலி, தொலைக்காட்சிப் பிரபலமும் பழம்பெருங்கலைஞருமான திருவாட்டி கிருஷ்ணவேணி
அவருக்கு வயது 83 . சிங்கப்பூரின் இந்திய ஊடகப் பிரிவில் பல ஆண்டுகள் பணியாற்றியவர்
- சிங்கப்பூரின் முன்னாள் தேசியக் காற்பந்து விளையாட்டாளர், முகமது நோ ஹுசேன் (Mohamed Noh Hussein)
அவருக்கு வயது 67. மாட் நோ என்று செல்லமாக அழைக்கப்படும் அவர், 1970-களில் சிங்கப்பூர்க் காற்பந்துக் குழுவின் முன்னணி ஆட்டக்காரராகத் திகழ்ந்தார்.
- சிங்கப்பூரின் பிரபல உள்ளூர்க் கலைஞர் ஆனந்த கண்ணன் காலமானார்.
அவருக்கு வயது 48. சுமார் 30 ஆண்டுக் காலமாக நிகழ்ச்சிப் படைப்பாளராகவும், நடிகராகவும் பலர் மனத்தில் இடம்பிடித்தவர். AKT Theatres எனும் கலை அமைப்பை நிறுவி, நிர்வகித்துவந்தார்.
- சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு. சுப. அருணாச்சலம்
அவருக்கு வயது 61. கழகத்தின் முன்னைய செயலாளரான அவர், 2019-ஆம் ஆண்டு தலைவர் பொறுப்பை ஏற்றார்.
- புக்கிட் கோம்பாக் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவருமான திரு. லிங் ஹாவ் டூங் (Ling How Doong)
அவருக்கு வயது 85. ஊழியர்களின் உரிமைகளைத் தற்காக்க, அயராது பாடுபட்டவர் திரு. லிங்.
- சிங்கப்பூரின் முதல் ஆசிய அஞ்சலக அதிகாரி திரு. M. பாலசுப்பிரமணியன்
அவருக்கு வயது 103. 1936ஆம் ஆண்டில், சிங்கப்பூர்ப் பொதுச் சேவைத் துறையில் சேர்ந்த அவர், காலனித்துவ ஆட்சியின்கீழ், அஞ்சல் துறையில் அலுவலகராகப் பணியாற்றினார். POSB வங்கி வழி மக்களைச் சேமிக்க ஊக்குவிப்பதற்கு, 1968-ஆம் ஆண்டில் சேமிப்பு வங்கிக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் தலைவராகப் பொறுப்பேற்ற திரு. பாலசுப்பிரமணியன், வங்கியின் உருமாற்றத்திற்கு வழிவகுத்தார்.
- சிங்கப்பூர் நாடகக் கலைஞர் திருமதி சுசிலா வேலு
அவருக்கு வயது 87. இளம் வயதில் வானொலிப் படைப்பாளராக கலைப் பயணத்தைத் தொடங்கிய திருமதி சுசிலா வேலு, சுமார் 50 ஆண்டுகாலம் நாடகத்துறைக்குப் பங்களித்துள்ளார்.