சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
'ChatGPT படைப்பாளர்களுக்கு பெரும் சவாலாக அமையும்: தொழில்நுட்ப வல்லுநர்

நிறுவனங்கள், தனிநபர்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் - இப்படிப் பலரும் ஆர்வத்துடன் பேசும் தொழில்நுட்பம் ChatGPT.
மனிதனைப் போன்று உரையாடும் செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) தொழில்நுட்பம்தான் ChatGPT.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் அதிகரிப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை.... ஆனால் ஆபத்துகளும் கூடவே வரும் என்கிறார் தகவல் தொழில்நுட்ப வல்லுநர் கணேஷ் நாராயணன்.
அவரிடம் மேலும் பல தகவல்களைக் கேட்டறிந்தது 'செய்தி'

1. ChatGPT- நன்மை என்ன?
- இது மனிதர்களைப் போல் உரையாடல் முறையில் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது. அதனால் வாடிக்கையாளருக்கு திருப்திகரமான சேவை கிடைக்கும்.
- ஓர் உரையாடல் வாயிலாக அதனால் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு வேகமாகவும் விவேகமாகவும் பதிலளிக்க முடியும்.
- நிறுவனங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து செலவை மிச்சப்படுத்தலாம்.
- கற்றல் - கற்பித்தலில் கல்வியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இது உதவியாக இருக்கலாம்.
2. ChatGPT- தீமை என்ன?
- ChatGPT ஒரு குறிப்பிட்ட அளவு தரவுகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே, அதில் இல்லாத கேள்விகள் சிக்கலை ஏற்படுத்தலாம்.
- பாடலாசிரியர்கள், கவிஞர்கள், மென்பொருள் வித்தகர்கள் என படைப்பாளர்களின் படைப்புகளுக்கு இது பெரிய சவாலாக விளங்கலாம்.
- தொழில்நுட்பம் விரிவடையும்போது சேவை வழங்கும் துறைகளில் வேலை வாய்ப்புகள் குறையும் வாய்ப்புண்டு.
2. ChatGPT எந்தெந்த வேலைகளைப் பாதிக்கலாம்?
- வாடிக்கையளர் சேவை ஊழியர்கள்
- மென்பொருள் பொறியாளர்கள்
- மின்னிலக்க வர்த்தகத் துறையினர்
- படைப்பாளிகள்
- எழுத்தாளர்கள்
- கல்வியாளர்கள்
இவர்களது வேலையை ChatGPTயே செய்துவிடும் என்பதால் அவை பாதிக்கப்படலாம்."
3. ChatGPTஇன் எதிர்காலம்?
- செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ChatGPT துணைபுரியும்.
- பல நிறுவனங்களில் கேள்வி-பதில் சேவையில் ChatGPT முக்கிய இடம்பிடிக்கலாம்.
- மருத்துவமனை மின்னிலக்க நிர்வாகம் அதாவது நோயாளிகளைக் கண்காணித்தல், மின்னிலக்கத் தாதி போன்ற சேவைகளுக்கும் அது வருங்காலத்தில் உதவும்.
4. "மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்" "மனிதர்களின் சிந்தனையாற்றலைப் பாதிக்கலாம்" - மாறுபட்ட கருத்துகள்?
செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்கள் அதிகரிப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை.
1980களில் இருந்தே robotics என்ற பெயரில் அவை செயல்படுகின்றன. மென்பொருள் தாக்கமும் தரவு விஞ்ஞானமும் வளரும்போது இத்தகைய தொழில்நுட்பம் உருவாவது இயல்புதான்.
தொழில்நுட்பத்தைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. மாறாக அதைக் கொண்டு என்ன செய்யலாம் என யோசிக்க வேண்டும் என்கிறார் திரு. கணேஷ் நாராயணன்.