சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
7-15 வயதுப் பிள்ளைகளுக்குச் சொந்த வங்கிக் கணக்கு, பற்று அட்டை - இது அவசியமா? பெற்றோரின் மாறுபட்ட கருத்து
7 வயதில் தமது பிள்ளை தனிப்பட்ட வங்கிக் கணக்கைப் பயன்படுத்துவதை அனுமதிப்பாரா என்று 'செய்தி' கேட்ட கேள்விக்கு திருமதி ஜானகி அளித்த பதில் அது.
OCBC வங்கி அறிமுகம் செய்யும் புதிய OCBC MyOwn கணக்கை 7 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகள் சொந்தமாகப் பயன்படுத்தலாம். தனிப்பட்ட பற்று அட்டைகளையும் வைத்துக்கொள்ளலாம்.
அடுத்த மாதம் (அக்டோபர்) 20ஆம் தேதி அந்தச் சேவை அறிமுகம் காணும்.
பிள்ளைகளின் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் கண்காணிப்பது சிரமம், அதுவும் அவர்கள் தெரியாமல் மோசடிகளில் சிக்கிக் கொள்ளும் அபாயமும் இருக்கிறது என்று கருத்துரைத்தார் திருமதி ஜானகி.
தற்போது பல வங்கிகளில் பிள்ளைகளுக்கான கணக்குகள் இருந்தாலும் அவர்கள் பற்று அட்டைகளை வைத்துக்கொண்டு பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது.
பிள்ளைகளுக்குப் பணத்தைச் சேமிக்கக் கற்றுத்தர உண்டியல் போதும் என்று கூறினார் திருமதி காயத்திரி.
தாமும் பிள்ளைப் பருவத்தில் அவ்வாறே பணம் சேமிக்கக் கற்றுக்கொண்டதாகக் கூறினார் அவர். தமது 3 பிள்ளைகளும் அவ்வாறே சேமிப்பின் அருமையைக் கற்பதை விரும்புகிறார் அவர்.
பெற்றோர் பரிவர்த்தனை நடந்த பிறகே அதைப் பற்றி அறியும்போது ஒன்றும் செய்ய முடியாது என்று சொன்னார் திரு ஸ்ரீதரன்.
பிள்ளைகள் தெரியாமல் மோசடிகளில் சிக்கினால் அல்லது நண்பர்களுக்குப் பணம் அனுப்பினால் பரிவர்த்தனைக்குப் பிறகு பெற்றோரால் என்ன செய்ய முடியும்? என்று வினவினார் அவர்.
"ரொக்கமில்லாச் சூழலுக்குப் பிள்ளைகளும் பழகுவது நல்லது"
பிள்ளைகளுக்குத் தனிக் கணக்குகள் இருப்பது நல்லதுதான் என்று மாற்றுக் கருத்துரைத்தார் திரு மகேந்திரன். "அவர்களின் செலவுகளை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்," என்றார் அவர்.
ஒவ்வொரு வாரமும் தமது பிள்ளைகளுக்குச் செலவுக்கு 50 வெள்ளி தரும் திருமதி சுமிதா, அதை அவர்களின் வங்கிக் கணக்குக்கு அனுப்புவது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் சுலபமாக இருக்கும் என்று சொன்னார்.
ரொக்கமில்லாப் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் காலக்கட்டத்தில் பிள்ளைகளும் சிறு வயதிலிருந்து அதற்குப் பழகுவது முக்கியம் என்றார் அவர். மோசடிகளை அடையாளம் காண்பது, அவற்றைத் தவிர்ப்பது எப்படி என்று பெற்றோர் பிள்ளைகளுக்குச் சொல்லித்தரவேண்டும்.
பிள்ளைகள் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தினாலும் பெற்றோரின் ஆலோசனையை நாடுவதைப் பழக்கமாக்கிக்கொண்டால் பிரச்சினையே இல்லை என்றார் அவர்.