சைனா டவுனில் 6 வயதுச் சிறுமி மரணம் - பெண் ஓட்டுநர் கைது
சௌத் பிரிட்ஜ் ரோட்டில் (South Bridge Road) இருக்கும் Buddha Tooth Relic ஆலயத்திற்கு வெளியே நடந்த விபத்து தொடர்பில் 38 வயதுப் பெண் ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவர் கவனமின்றி காரை ஓட்டி மரணம் விளைவித்ததாக கூறப்படுகிறது.
விபத்தில் 6 வயதுச் சிறுமி மாண்டார்.
விசாரணை நடைபெறுவதாக காவல்துறை 'செய்தி'யிடம் சொன்னது.
கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) காலை சுமார் 11.50 மணிக்கு விபத்தைப் பற்றித் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
விபத்தில் 31 வயதுப் பெண்ணும் அவருடைய 6 வயது மகளும் சிக்கினர்.
இருவரும் சுயநினைவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் பின்னர் மகள் உயிரிழந்தார்.
விபத்தைப் பற்றி வெள்ளிக்கிழமை காலை SG Road Vigilante Facebook பக்கத்தில் பதிவிடப்பட்டது. கார் நிறுத்துமிடத்திலிருந்து வெளியே காரை ஓட்டி வந்தவர் அந்த இருவரையும் இடித்து அவர்கள் மேல் காரை ஏற்றியதாகப் பதிவில் குறிப்பிடப்பட்டது.
விபத்தின் மற்ற படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டன. அவற்றில் சிறுமியின் தந்தை அவருடைய உடலைப் பிடித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. மற்ற வழிப்போக்கர்கள் உதவி புரிவதும் தெரிந்தது.