பாலர்பள்ளிச் சிறார் மானபங்கம் - புகாரளிக்கத் தவறிய தலைமையாசிரியருக்குச் சிறை
This audio is generated by an AI tool.
பாலர் பள்ளியொன்றின் முன்னாள் தலைமையாசிரியருக்கு 10 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு வயது 62.
பாலர்பள்ளி சமையல்காரர் சிறாரை மானபங்கம் செய்ததை மறைத்ததற்காக அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவருக்கு அபராதம் விதிக்கும்படி அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கோரினார். ஆனால் நீதிபதி அவருக்குச் சிறைத்தண்டனை விதித்தார்.
பிள்ளைகளை எப்படித் துன்புறுத்தலிலிருந்து பாதுகாப்பது போன்ற பயிற்சிகளுக்கு அவர் சென்றிருக்கிறார்.
இருந்தும் அவர் இந்தச் சம்பவத்தைப் பற்றிப் புகார் செய்யவில்லை என்று நீதிபதி சுட்டினார்.
பாலர்பள்ளியில் 3 சிறாரை மானபங்கம் செய்த 61 வயதுச் சமையல்காரர் தியோ குவான் ஹுவாட்டிற்கு (Teo Guan Huat) சென்ற ஆண்டு (2025) நவம்பரில் சுமார் 9 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மானபங்கச் சம்பவம் 2023ஆம் ஆண்டு நடந்தது.
தியோவின் செயல் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தது.
இதற்கு முன் துணைத் தலைமையாசிரியருக்கும், முன்னாள் நிர்வாக இயக்குநருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த இரு பெண்களும் தியோ செய்த குற்றங்களைக் காட்டும் காணொளிகளை அழித்தனர்.