Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 நோய்த்தொற்றைச் சுயமாக குணப்படுத்த முற்படுவது - பாதுகாப்பானதா?

சிங்கப்பூரில், சமூக அளவில் கிருமிப்பரவலுக்கு ஆளாவோர் எண்ணிக்கை, கடந்த சில நாள்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில், சமூக அளவில் கிருமிப்பரவலுக்கு ஆளாவோர் எண்ணிக்கை, கடந்த சில நாள்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சிலர் COVID-19 நோயை குணப்படுத்தவும், அதனால் பாதிப்படைவதைத் தவிர்க்கவும், சொந்தமாக சில மருந்து, மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இணையம் மூலமாக வெளிநாடுகளிலிருந்து ivermectin போன்ற மாத்திரைகளைச் சிலர் வாங்குவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், COVID-19 நோயைச் சுயமாகக் குணப்படுத்த முற்படுவது பாதுகாப்பான செயலா?

அவ்வாறு செய்வது சரியல்ல என்கிறார் Tayka Medical Family Clinic மருத்துவர் கண்ணன்.

COVID-19 நோய், அடிப்படையில் ஒரு சுவாசப் பிரச்சினை. மற்ற சுவாசப் பிரச்சினைக்கான அறிகுறிகளைப் போல், இதற்கும் சளி, காய்ச்சல், இருமல் ஆகியவை ஏற்படுவது உண்டு.

அதனால், கடைகளில் பெறக்கூடிய மருந்து, மாத்திரைகளைக் கொண்டு, சுயமாகக் குணப்படுத்தச் சிலர் நினைக்கலாம்.

ஆனால், COVID-19 நோயால் Pneumonia காய்ச்சல் ஏற்படும் அபாயம் உண்டு. மேலும், தொடக்கத்தில் அவ்வளவாக பாதிப்பு தெரியாமல் இருக்கலாம். எனினும், உடலின் உயிர்வாயு அளவு மிகவும் குறைவாக இருக்கும்போது, திடீரென்று உடல்நலமில்லாமல் போகலாம்.

மேலும், ivermectin போன்ற மருந்துகளை, சுகாதார நிபுணரின் கண்காணிப்பின்றி உட்கொண்டால், அதுவே உடலுக்கு நஞ்சாக மாறலாம்.

இத்தகைய சிக்கல்களால், கிருமித்தொற்றைச் சொந்தமாக குணப்படுத்திக்கொள்ள முயல்வது முறையான செயல் அல்ல என்று டாக்டர் கண்ணன் கூறினார்.

அது பொதுச் சுகாதாரத்தையும் பாதிக்கக்கூடியது என்பதால், மருத்துவரை அணுகி, முறையான சிகிச்சை பெறுவதே சிறந்தது என்று அவர் கூறினார்.

COVID-19 நோய்த்தொற்றைத் தவிர்க்க மருந்து, மாத்திரைகள் உண்டா?

துரதிருஷ்டவசமாக அத்தகைய மருந்துகள், தற்போதைக்கு இல்லை என்று டாக்டர் கண்ணன் தெரிவித்தார்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம், சீரான உடற்பயிற்சி, போதுமான தண்ணீர், ஓய்வு...

உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த இவை போதும் என்று அவர் சொன்னார்.

உடல்நலமில்லை என்றால் மருத்துவரை அணுகி, சரியான சிகிச்சையைப் பெறுவது நமது சமூகக் கடமை.

குறிப்பாக, கிருமிப்பரவல் சூழலில் அவ்வாறு நடந்துகொள்வதன் முக்கியத்துவம் மேலும் அதிகரிப்பதாக டாக்டர் கண்ணன் குறிப்பிட்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்