சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"அன்பும் கனிவும் முக்கியம்" - தீமிதித் திருவிழாவில் நெரிசலைத் தவிர்க்க உதவும் குழுவினர்
சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் தீமிதித் திருவிழா என்றாலே அலைமோதும் கூட்டம் நம் மனக்கண்ணில் தோன்றும்.
அந்தக் கூட்ட நெரிசலைச் சீர்படுத்தி அனைத்து ஏற்பாடுகளும் சுமுகமாக நடைபெறுவதைக் கண்காணிப்பதற்காகவே ஒரு சிறப்புக் குழு உள்ளது.
மக்கள் சிரமப்படாமல் திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்பதை உறுதி செய்வதே அவர்களின் இலக்கு.
அந்தக் குழுவைச் சேர்ந்த திரு ஆனந்தனிடம் 'செய்தி' பேசியது.
மக்கள் கூட்டத்தைச் சீர்படுத்தும் பணிகளைச் செய்யும்போது அன்பும் கனிவும் முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.
சில நேரங்களில் சூழ்நிலைகள் மாறும்; சில சிக்கல்கள் ஏற்படலாம். பலதரப்பட்ட பக்தர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று திரு ஆனந்தன் குறிப்பிட்டார்.
கூட்ட நெரிசலைச் சீர்படுத்தும் பணிக்குழு தீமிதித் திருவிழா சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய உதவுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் எத்தனைப் பக்தர்கள் பூக்குழியில் இறங்குகின்றனர் என்ற எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார் திரு ஆனந்தன்.
அதற்கான திட்டமிடல் முன்கூட்டியே தொடங்கிவிடும்.
கடைசிப் பக்தர் தமது நேர்த்திக்கடனைச் செலுத்தி முடிக்கும் வரை குழுவினர் கோயிலில் இருப்பர் என்று அவர் சொன்னார்.
நிர்வாகம் கொடுத்த சில புதிய யோசனைகளால் இந்த ஆண்டு எல்லாப் பணிகளும் சற்று எளிதாக அமைந்ததாக அவர் கூறினார்.
இந்த ஆண்டின் தீமிதித் திருவிழா அதிகாலை சுமார் 4 மணியளவில் நிறைவடைந்தது.