Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"விமானம் ஆட்டங்காணும்போது பதற்றத்துடன் செயல்பட்டால் உயிருக்கு ஆபத்து நேரிடலாம்" - விமானத்துறை நிபுணர்

வாசிப்புநேரம் -
லண்டனிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மோசமாக ஆட்டங்கண்டதில் ஒருவர் மாண்டார். பலர் காயமுற்றனர்.

விமானம் நடுவானில் ஆட்டங்காணும் சம்பவங்களைப் பற்றி படித்திருப்போம், கேட்டிருப்போம்.

ஆனால் விமானம் ஆட்டங்கண்டதால் பயணி மரணமடைவது குறித்து நாம் அடிக்கடி கேள்விப்படுவதில்லை.

விமானம் ஆட்டங்கண்டால் உயிருக்கு எப்படி ஆபத்து நேரிடலாம் என்பதை அறிய 'செய்தி' விமானத்துறை நிபுணரான அக்மாலுடன் பேசியது.

"பதற்றத்துடன் செயல்பட்டால் உயிருக்கு ஆபத்து"

"இக்கட்டான சூழ்நிலையில் முடிந்தவரை நிதானமாகச் செயல்படுவது முக்கியம். பயணிகளும் விமானச் சிப்பந்திகளும் பதற்றமடைந்தால் தெளிவாக யோசிக்க இயலாது. அதுபோன்ற தருணங்களில் விரைவாகச் சிந்தித்துச் செயல்படவேண்டும். இல்லாவிடில் அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம்," என்று அக்மால் 'செய்தி'யுடன் பகிர்ந்தார்.

"பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் இருந்தால் காயமடையலாம்"

"பொதுவாக விமானம் ஆட்டங்காண்பதற்கு முன்பே இருக்கை வாரை அணிந்துகொள்ளுமாறு விமானி பயணிகளிடம் கேட்டுக்கொள்வார். ஒருவேளை பயணி அந்த அறிவுரையைப் பொருட்படுத்தாமல் இருந்தால் அவர் காயமடையலாம்; அது மரணத்தைக்கூட ஏற்படுத்தலாம்" என்று அவர் சொன்னார்.

உடனுக்குடன் செயல்படப் போதிய நேரம் இல்லை

"மோசமான வானிலையால் விமானம் திடீரென ஆட்டங்காணும்போது விமானியும் பயணிகளும் உடனுக்குடன் செயல்படப் போதிய நேரம் கிடைக்காவிட்டால் அது பேராபத்தை விளைவிக்கலாம். எதிர்பார்த்ததைவிட நிலைமை மோசமாக இருந்தால் உயிருக்கே ஆபத்து நேரலாம்," என்றார் அக்மால்.

"பயணிகளுக்கு ஏற்கெனவே உடல்நலக் கோளாறுகள் இருந்தால் பிரச்சினை"

பயணிகளுக்கு ஏற்கெனவே உடல்நலக் கோளாறுகள் இருந்தால் அத்தகைய இக்கட்டான தருணங்களில் மனவுளைச்சல் ஏற்படலாம்; அது ஆபத்தைப் பல மடங்கு அதிகரிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

விமானத்தில் பயணம் செய்யும்போது எப்போதும் இருக்கை வார் அணிந்து கொள்வது பாதுகாப்பானது என்று அக்மால் வலியுறுத்தினார்.

அக்மால் கடந்த 20 ஆண்டுகளாக விமானத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்