Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயக் குடமுழுக்கு - அதிகாலை 3 மணிமுதல் திரளத் தொடங்கிய பக்தர்கள்

வாசிப்புநேரம் -
காமன்வெல்த் டிரைவ் ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் இன்று குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.

வழக்கமாக ஆலயங்களில் குடமுழுக்கு விழா நடந்துமுடிய நண்பகல் ஆகிவிடும்.

ஆனால் ஸ்ரீ முனீஸ்வரன் ஆலயத்தில் இன்று அதிகாலையிலேயே கடப்புறப்பாடு நடந்தது.

காலை 6.45 மணிக்கெல்லாம் ஆலயக் கலசங்களில் தண்ணீர் ஊற்றப்பட்டது.

காலை 7.15 மணிக்குப் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 
வேலை நாள் என்றாலும் விடியற்காலை 3 மணிக்கே பக்தர்கள் ஆலயத்தில் திரளத் தொடங்கிவிட்டனர்.

இருளையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் ஆலய வளாகத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளை நிரப்பியிருந்தனர்.

குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

"என் வீடு ஆலயத்துக்கு மிக அருகில் இருக்கிறது. அதிகாலை 5 மணிக்கு ஆலயத்துக்கு நடந்தே வந்துவிட்டேன். நான் வரும்போது பக்தர்கள் கூட்டம் அவ்வளவாக இல்லை. அதனால் கோபுரத்தை நோக்கி நேராக அமரும் வாய்ப்புக் கிடைத்தது. 12 ஆண்டுக்குப் பிறகு குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்வதில் தனி மகிழ்ச்சி," என பக்தர்களில் ஒருவரான ராஜம்மா சொன்னார்.

சுமார் ஓராண்டாய்க் கோயில் சீரமைப்புப் பணிகள் இடம்பெற்றன. குடமுழுக்கைக் காண வந்த பக்தர்களுக்குத் தொண்டூழியர்கள் வழிகாட்டினர்.

"எனக்கு மாலையில் வேலை என்பதால் காலையில் ஆலயத்துக்கு வந்து குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. தொண்டூழியர்கள் அருமையாக வழிகாட்டினர். அமர்வதற்கு நாற்காலியும் குடிப்பதற்குத் தண்ணீரும் கொடுத்தனர். மிகவும் திருப்தியாக உள்ளது," என்றார் திருமதி சரஸ்வதி.

பெருமளவு பக்தர்களை ஒரே இடத்தில் பார்ப்பது பேரானந்தம் என்றார் திருமதி செல்வி.

"நான் என் நண்பர்களுடன் ஆலயத்துக்கு வந்தேன். ஆனால் எங்களுக்கு முன்பே நிறையப் பேர் இங்கு வந்துவிட்டனர்," என்றார் அவர்.
 
அதிபர் தர்மன் சண்முகரத்னமும் அவருடைய மனைவியும் தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் சுவா உள்ளிட்டோரும் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டனர்.
சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் பக்தர்கள் காலை 7.30 மணி முதல் ஆலயத்துக்குள் நுழையத் தொடங்கினர்.

மற்ற பக்தர்கள் ஆலயத்துக்குள் செல்லக் காத்திருக்கவேண்டும் என்பதால் அவர்களை அன்னதானத்தில் கலந்துகொள்ளுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டனர்.
 
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்