Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"பல இன மக்கள் கூட்டுக் குடும்பமாகப் பொங்கல் கொண்டாடுவோம்"

வாசிப்புநேரம் -
தமிழராக இருந்தால்தான் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடலாம் என்பதில்லை.

பல இன மக்களும் பொங்கலைச் சேர்ந்து கொண்டாடலாம் எனச் சமூகத் தலைவர் திரு நசீர் கனி 'செய்தி'யிடம் பகிர்ந்தார்.

அவர் ஆண்டுதோறும் குடும்பத்துடனும் சமூகத்துடனும் பொங்கல் பண்டிகையை வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார்.

இளவயதில் கம்போங் காலத்தில் தமிழ் நண்பர்களுடன் இணைந்து பொங்கல் திருநாளைக் கொண்டாடிய அனுபவம் மனத்தில் பதிந்ததாகச் சொன்னார் அவர்.

"பல இன மக்கள் கூட்டுக் குடும்பமாகப் பொங்கல் கொண்டாடுவோம்"

"கம்போங் வட்டாரத்தில் வெவ்வேறு இனம், மதம், கலாசாரப் பின்னணிகளைச் சேர்ந்தோர் ஒரு கூட்டுக் குடும்பமாகப் பொங்கல் திருநாளைச் சேர்ந்து கொண்டாடினோம். அதை நான் தொடர்ந்து வீட்டிலும் சமூகத்திலும் பின்பற்றுகிறேன்," என்றார் அவர்.

"மக்களிடையே நல்லுறவு வளரும்; புரிந்துணர்வு வலுப்படும்"

வெஸ்ட் கோஸ்ட் இந்திய நற்பணிப் பேரவையில் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் அவர் கடந்த சில ஆண்டுகளாக அங்குப் பொங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறார்.

"தமிழர் கலாசாரத்தைப் பற்றி மற்ற இனத்தவரும் புரிந்துகொள்ளப் பொங்கல் நிகழ்ச்சி சிறந்த வாய்ப்பளிக்கிறது. பல இன மக்களிடையே நல்லுறவு வளரும். புரிந்துணர்வு வலுப்படும்," என்று அழகாய்ச் சொன்னார் அவர்.

பொங்கல் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பண்டிகை என்று கூறிய திரு நசீர் கனி இல்லப் பணிப்பெண்ணைத் தமது குடும்பத்தில் ஒருவராய்ப் பார்ப்பதாகச் 'செய்தி'யிடம் பகிர்ந்தார்.

"எங்கள் பணிப்பெண்ணுடன் சேர்ந்து பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடும்போது, தமிழ்நாட்டை விட்டு, வீட்டை விட்டு, உற்றார் உறவினர்களை விட்டுப் பிரிந்திருக்கும் வருத்தம் அவருக்கு ஏற்படுவதில்லை. பண்டிகையின்போது அவர் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றைத் தயாரித்துக் கொடுப்பார்," என்று நெகிழ்ந்தார் திரு நசீர் கனி.

தமிழாசிரியராகப் பணிபுரியும் அவரது மனைவி மும்தாஜ் பள்ளியில் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்கிறார். அது மாணவர்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் என்றார் அவர்.

"பிள்ளைகள் மற்ற கலாசாரங்களை மதித்து நடப்பதைப் பார்க்கும்போது மனத்திற்கு நிறைவாக உள்ளது"

தாமும் தமது மனைவியும் தமிழர் பண்டிகைகளில் ஈடுபாடு காட்டுவதைப் பார்த்து வளர்ந்த 4 பிள்ளைகளும் மற்ற கலாசாரங்களை மதித்து நடப்பதைப் பார்க்கும்போது மனத்திற்கு நிறைவாய் இருப்பதாகத் திரு நசீர் கனி உணர்வுபூர்வமாகச் சொன்னார்.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்