மிதமிஞ்சிய வேகத்தில் சென்றதாகக் கனரக வாகன ஓட்டுநர்கள் மீது சந்தேகம்
(கோப்புப் படம்: CNA/Jeremy Long)
சிங்கப்பூரில் வேக வரம்பை மீறிய கனரக வாகனமோட்டிகள் 8 பேர் மீது நாளை (2 ஜூன்) குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
அவர்கள் 25 வயதுக்கும் 51 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று காவல்துறை கூறியது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் இவ்வாண்டு பிப்ரவரி மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்கள் மிதமிஞ்சிய வேகத்தில் ஓட்டியதாக நம்பப்படுகிறது.
மூவர் புக்கிட் தீமா விரைவுச்சாலையிலும் (BKE) மேலும் மூவர் தீவு விரைவுச்சாலையிலும் (PIE) வாகனத்தை ஓட்டினர்.
எஞ்சிய இருவர் ஷியர்ஸ் அவென்யூவில் வாகனமோட்டினர்.
ஷியர்ஸ் அவென்யூவில் 51 வயது ஆடவர் ஆக அதிகமாக மணிக்கு 81 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அவர் ஓட்டிய பேருந்தின் வேக வரம்பு மணிக்கு 60 கிலோமீட்டர்.
வாகனங்கள் அனைத்திலும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் பொருத்தப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
வேக வரம்பை மீறிய குற்றத்துக்கு 1,000 வெள்ளி வரை அபராதமோ 3 மாதம் வரை சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
மீண்டும் மீண்டும் குற்றம் புரிவோருக்கு 2,000 வெள்ளி வரை அபராதமோ 6 மாதம் வரை சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.
அவர்கள் வாகனம் ஓட்டவும் தடை செய்யப்படலாம்.