Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெறுமையாக உணர்ந்தாலும் காலத்தின் கட்டாயம் புரிகிறது-வீட்டில் நேரத்தைக் கழிக்கும் மூத்தோர்

"கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த மூத்தோர் தங்கள் பங்கை ஆற்றவேண்டும்." இன்று அனைத்துலக மூத்தோர் தினம். அதையொட்டி 'செய்தி'-இடம் பேசிய முதியவர்கள் சிலர் அவ்வாறு தெரிவித்தனர்.

வாசிப்புநேரம் -

"கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த மூத்தோர் தங்கள் பங்கை ஆற்றவேண்டும்."

இன்று அனைத்துலக மூத்தோர் தினம். அதையொட்டி 'செய்தி'-இடம் பேசிய முதியவர்கள் சிலர் அவ்வாறு தெரிவித்தனர்.

மூத்தோர் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது இன்றைய நாளின் நோக்கம்.

சிங்கப்பூரில் அண்மை நாள்களில் கிருமிப்பரவல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மூத்தோர் அனைவரும் அடுத்த 4 வாரங்களுக்கு வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்டோர்,குறிப்பாகத் தனியாக வசிப்போர் பொழுதை எப்படிச் செலவழிக்கவிருக்கின்றனர்?

கேட்டது 'செய்தி'.

நம் பங்கு முக்கியம்

மூத்தோர் அதிகளவில் வெளியே செல்கிறார்கள் என்று நினைக்கிறேன். சிலர் ஒழுங்காக முகக்கவசமும் அணிவதில்லை. கிருமிப்பரவலுக்கு எதிராக அரசாங்கம் அதன் பங்கை ஆற்றுகிறது. நாமும் நம் பங்கை ஆற்றவேண்டாமா?,

என்றார் 72 வயது மேரி பேபி யேஷாமலை (Mary Baby Yeshammale).

அவர் தேசிய மூத்தோர் பயிற்சிக்கழகம் (National Silver Academy) நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதுண்டு. இருப்பினும், அண்மை நாள்களாக நேரடி வகுப்புகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

அவர் தற்போது வீட்டில் இருந்தவாறு புத்தகங்களைப் படிப்பதிலும் வழிபாட்டு நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறினார்.

சேவையில் நிம்மதி

வீட்டிற்கு அருகிலுள்ள சுகாதாரப் பராமரிப்பு நிலையத்தில் மூத்தோர் பராமரிப்புத் தொண்டூழியராகச் செயல்படுகிறார் திருவாட்டி தனலெட்சுமி.

"இப்போது நான் சேவையாற்றும் மூத்தோரிடம் அவ்வப்போது தொலைபேசியில் பேசி ஆறுதலாக இருக்கிறேன். நாங்கள் ஒருவொருக்கொருவர் படங்கள் எடுத்துப் பகிர்ந்துகொள்ளவும் தவறுவதில்லை. அதற்கும் அப்பால், நான் புளோக்கில் வசிக்கும் தேவையுடையவர்கள் சிலருக்கு அன்றாடம் உதவி புரிவது உண்டு. அதிலேயே எனக்கு நேரம் ஓடிவிடும்," என்றார் அவர்.

வீட்டில் இருந்தவாறு...

இதற்கு முன்னர், நண்பர்களுடன் இணைந்து சமூக மன்ற நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வந்த திருவாட்டி இந்திராணியால், தற்போது எங்கும் செல்லமுடியவில்லை.

தனியாக வசிக்கும் அவர், தாம் வெளியே செல்லும் சூழல்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு,வெளியிடங்களில் முடிந்தளவு குறைவான நேரத்தைச் செலவழிப்பதாகச் சொன்னார்.

எனக்குத் தியானம் செய்வதற்கும், வெளியே சென்று உடற்பயிற்சி செய்வதற்கும் மிகவும் பிடிக்கும். சூழ்நிலை சரியில்லை என்பதால், அவற்றை வீட்டில் இருந்தவாறு செய்யவிருக்கிறேன்,

என்றார்,  திருவாட்டி இந்திராணி.

'வீட்டில் செய்வதற்கு எவ்வளவோ உள்ளன'

வீட்டில் இருந்தவாறு செய்வதற்கு பல நடவடிக்கைகள் இருப்பதாகச் சொன்னார் திருமதி காளியம்மா.

காலையில் எழுந்தவுடன் உடற்பயிற்சி, பொருள் வாங்குதல், சமையல், பேரப்பிள்ளைகளுடன் பேசுவது, மற்ற அன்புக்குரியவர்களுடன் பேசுவது...பிள்ளைகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் சமைப்பது...என நாளைக் கடத்துவேன். பொறுமையாக வீட்டைச் சுத்தம் செய்வேன்.

என்றார் அவர்.

சந்தைக்குச் செல்வது போன்ற அத்தியாவசியக் காரணங்களுக்காக, வெளியே செல்வதைத் தவிர்க்க முடியாது. அதனால், Booster தடுப்பூசி போட்டுக்கொள்ளக் காத்திருப்பதாகத் திருமதி காளியம்மா கூறினார்.

குடும்பத்தாரும், அண்டை வீட்டாரும் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க உதவிசெய்வதாக மூத்தோர் தெரிவித்தனர்.

வெளியில் செல்ல முடியாததால், சில சமயங்களில் வெறுமையாக உணர்ந்தாலும், காலத்தின் கட்டாயத்தைப் புரிந்துகொள்ள முடிவதாக அவர்கள் கூறுகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்