சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"நண்பர்களைப் போல் இருக்கவேண்டியுள்ளது" - சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இளையர்களின் பெற்றோர்

(கோப்புப் படம்: AFP)
அண்மையில் மனநலக் கழகம் (IMH) நடத்திய தேசிய இளையர் மனநல ஆய்வில் அது தெரியவந்தது.
ஆய்வில் கலந்துகொண்டவர்கள் 15 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
மனநலம் குறித்த அறிகுறிகளுக்கு முக்கியமான காரணங்களை ஆய்வு வெளிப்படுத்தியது.
அதிகமாகச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது அவற்றுள் ஒன்று.
அதைப் பற்றி பெற்றோர் சிலர் தங்களுடைய கருத்துகளை 'செய்தி'யிடம் பகிர்ந்துகொண்டனர்.

தம்முடைய பிள்ளைகள் சமூக ஊடகங்களில் என்னென்ன உள்ளடக்கங்களைப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி தம்மிடம் வெளிப்படையாகப் பேசும் வாய்ப்பை வழங்குவதாகச் சொன்னார் 3 இளையர்களுக்குத் தாயாரான திருமதி மஞ்சுளா.
“இந்தக் காலக்கட்டத்தில் பிள்ளைகளிடம் சமூக ஊடகங்களை முற்றிலும் பயன்படுத்தக் கூடாது என்று சொல்ல முடியாது. பெற்றோராக நாம் அவர்களுடைய பக்கங்களை Follow செய்யலாம், reactions கொடுக்கலாம். அப்போது நாம் அவர்களிடமிருந்து வேறுபட்டுத் தெரியமாட்டோம்,” என்றார் 2 இளையர்களுக்குத் தாயாரான திருமதி ரமா பார்வதி.
அவர்களைக் கண்காணிக்காமல் நண்பர்களைப் போல் இருக்க விரும்புவதாகப் பெற்றோர் சிலர் பகிர்ந்துகொண்டனர்.

இளையர்கள் தங்களுடைய இணைய நடவடிக்கைகளைப் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ளத் தயங்குவதாக 2 இளையர்களுக்குத் தாயாரான திருமதி அனிதா கூறினார்.
"பெற்றோர் கண்டிப்பாக நடந்துகொள்வர் என்ற எண்ணம் அவர்களிடையே இருக்கிறது"
பெரும்பாலும் இளையர்கள் தங்களுடைய பிரச்சினைகளைச் சொந்தமாகத் தீர்த்துக்கொள்ள எண்ணுகின்றனர் என்றார் திருமதி ரமா பார்வதி.

தம்முடைய பிள்ளைகளிடம் மனநலம் குறித்த அறிகுறிகள் தென்பட்டால் உதவி நாடத் தயங்கமாட்டோம் என்று 'செய்தி'யிடம் பேசிய பெற்றோர் கூறினர்.
மனநல பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது உதவி நாடுவது தைரியமான முடிவு என்பதைத் தம்முடைய பிள்ளைகளுக்குப் புரிய வைக்க எண்ணுவதாகத் திருமதி மஞ்சுளா குறிப்பிட்டார்.
காலம் மாறிவிட்டது..
இளையர்கள் வளரும் சூழலும் மாறிவிட்டது..
பெற்றோர் அதனை புரிந்து நடந்துகொண்டால் இளையர்களின் மனநலப் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறியலாம் என்று பெற்றோர் பகிர்ந்துகொண்டனர்.
அதற்கு இளையர்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்றனர் பெற்றோர்.