Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

"சிங்கப்பூர் என்னை மிகவும் நேசித்தது" : புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷ் ஊழியர் ஃபாஸ்லி காலமானார்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக கலாசார நிகழ்ச்சி நடத்தி, நூலகம் ஒன்றையும் தொடங்கிய பங்களாதேஷ் ஊழியர் ஃபாஸ்லி இலாஹி (Fazley Elahi) காலமானார்.

அவருக்கு 2022ஆம் ஆண்டு பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரம்பக்கட்ட சிகிச்சை எடுத்துக்கொண்ட போதிலும் அவருக்குப் புற்றுநோய் மிக வேகமாகப் பரவியது.

நண்பர்கள் மத்தியில் ருபேல் (Rubel) என்றழைக்கப்படும் 38 வயது ஃபாஸ்லி புற்றுநோயுடன் போராடி வந்த காலத்தில் கடைசி ஆசையாக சிங்கப்பூரிலுள்ள சக ஊழியர்களுக்குக் கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

அதன் பிறகு அவர் தமது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடவும் தொடர் மருத்துவ சிகிச்சைக்காகவும் பங்களாதேஷுக்குத் திரும்பினார்.

சிங்கப்பூரிலிருந்து புறப்படுவதற்கு முன்பாகக் கடினமான நேரங்களில் தமக்கு உதவியாக இருந்த நண்பர்களை மறக்க முடியாது என்று ஃபாஸ்லி கூறினார்.

"சிங்கப்பூரும் இந்த மக்களும் என்னை அதிகம் நேசித்துள்ளனர்; நானும் அப்படித்தான். சிங்கப்பூரையும் அதன் மக்களையும் நேசிக்கிறேன்," என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஃபாஸ்லி இந்தியாவில் சிகிச்சை பெறவும் வருமான உதவி பெறவும் ஏற்பாடு செய்யப்பட்ட நிதித் திரட்டுக்கு சிங்கப்பூரிலுள்ள நிறையப் பேர் உதவினர்.

நிதித் திரட்டு வாயிலாக அவருக்கு உதவியதில் மகிழ்ச்சி என முன்னைய நாடாளுமன்ற நியமன உறுப்பினர் அந்தேயா ஓங் (Anthea Ong) கூறினார். அவர் முதல்முறையாக 2017ஆம் ஆண்டு ஃபாஸ்லியைச் சந்தித்தார்.

Migrant Worker CritiCare Fund எனும் திட்டம் உருவாகவும் ஃபாஸ்லி காரணமாக இருந்தார். கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களின் சிகிச்சைக்கு உடனடி நிதியாதரவு வழங்கும் திட்டம் அது.

ஃபாஸ்லி மிகவும் கலகலப்பான, தைரியமான, இரக்கக் குணமிக்கவர் என்று அவருடன் இணைந்து கலைநிகழ்ச்சி நடத்திய திரு அக் ஸிலானி (Ak Zilani) கூறினார்.

2009இல் முதன்முதலில் சிங்கப்பூருக்கு வந்த ஃபாஸ்லி 2017ஆம் ஆண்டு வெளிநாட்டு ஊழியர்களுக்காக நூலகம் ஒன்றைத் தொடங்கினார்.

பாடல், ஆடல், கவிதை ஒப்புவித்தல் ஆகிய திறமைகளைக் கொண்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களை மேடையேற்றும் முயற்சியாக 2018இல் கலைநிகழ்ச்சி நடத்தினார்.

BCA கல்வி நிலையத்தில் பட்டயக் கல்வி முடித்த ஃபாஸ்லி கட்டுமான நிர்வாகத் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பில் 2 தவணைகளை முடித்தார்.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்