புத்தாண்டு விடுமுறையில் இலவசமாகக் காப்பியும் தேநீரும் கொடுத்த கடை

Facebook/Collin Ng
சீனப் புத்தாண்டு விடுமுறை வரும்போது சீனக் கடைக்காரர்களால் நடத்தப்படும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருக்கும்.
அவற்றில் பானக் கடைகளும் அடங்கும்.
வழக்கமாகக் காப்பி வாங்கும் வாடிக்கையாளர்கள் எங்குச் செல்வதென்று தெரியாமல் இருப்பார்கள்...
மலாய் உணவை விற்கும் ஒரு கடை அதை அறியும்.
அது ஆண்டுதோறும் காப்பியையும் தேநீரையும் இலவசமாக வழங்கும்.
Makanan Singapura எனும் கடை மெக்பர்சன் (MacPherson) வட்டாரத்தில் சர்க்கிட் ரோடு, புளோக் 89இல் இருக்கும் உணவங்காடியில் உள்ளது.
அண்மையில் உணவங்காடியில் உணவு வாங்கச் சென்ற கோலின் இங் (Collin Ng) என்ற ஆடவர் தமது அனுபவத்தை Facebookஇல் பகிர்ந்துகொண்டார்.
அங்கு இருந்த 4 பானக் கடைகளும் மூடப்பட்டிருந்ததாகவும் மலாய் உணவுக் கடைக்காரர் பானம் அளிக்க முன்வந்ததாகவும் அவர் சொன்னார்.
பானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில்,வாடிக்கையாளர்களிடையே பானங்களுக்கான தேவை அதிகமாக இருக்கும்.
மலாய் உணவுக் கடை எண்ணியிருந்தால் பானங்களை விற்பனை செய்து லாபம் ஈட்டிருக்கலாம். கடை அவ்வாறு செய்யவில்லை.
கடையின் நற்செயலை இங் மெச்சினார்.