Skip to main content
"பணத்தைக் கண்டதும் பதறினேன்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

"பணத்தைக் கண்டதும் பதறினேன்" - கட்டாகக் கீழே கிடந்த பணத்தைக் காவல்துறையிடம் ஒப்படைத்த வெளிநாட்டு ஊழியர்

வாசிப்புநேரம் -

பொங்கோலில் கட்டாகப் பணத்தைக் கண்டெடுத்துள்ளார் வெளிநாட்டு ஊழியரான முத்துராஜேஷ்.

ஓட்டுநரான இவர் கடந்த 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்துவருகிறார்.

பொங்கோலில் ஊழியர் தங்கும் விடுதிக்கு அருகே நடைபாதையில் இன்று காலை 9.30 மணியளவில் ஒரு கட்டுப் பணத்தைத் தாம் கண்டெடுத்ததாக அவர் 'செய்தி'யிடம் சொன்னார்.

"பணத்தைக் கண்டதும் பதறிப்போனேன். 50, 100 வெள்ளி அல்ல; ஒரு கட்டாக இருந்தது" என்றார் முத்துராஜேஷ்.

பணத்தை எண்ணிப்பார்க்கவில்லை. ஆனால் அதில் ஏறக்குறைய 5,000 வெள்ளி இருக்க வாய்ப்புள்ளது என்று அவர் சொன்னார்.

பணத்தைத் தொலைத்தவர் அந்த இடத்துக்கு வரக்கூடும் என்ற எண்ணத்தில் அங்கேயே சிறிது நேரம் காத்திருந்ததாக முத்துராஜேஷ் சொன்னார்.

பின்னர் வேலைக்கு நேரமானதால் பணத்தைக் காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவுசெய்ததாகக் கூறினார்.

தமது வேலையிட மேலாளர் உதவியுடன் பணத்தைக் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டு வேலைக்குச் சென்றிருக்கிறார்.

ஒரு நூறு வெள்ளி சம்பாதிக்கச் சிரமப்படும் சூழ்நிலையில் இவ்வளவு பணத்தைத் தொலைத்தவரின் மனநிலை எப்படியிருக்கும் என்றுதான் தமக்கு முதலில் தோன்றியதாக முத்துராஜேஷ் சொன்னார்.

"நான் சம்பாதிக்கும் பணம் எனக்குப் போதும். பணத்தைத் தொலைத்தவரிடமே அது போய்ச்சேர வேண்டும் என்பதே எனது ஒரே எண்ணமாக இருந்தது, " என்று முத்துராஜேஷ் கூறினார்.

மேல் விவரங்கள் பெற 'செய்தி' சிங்கப்பூர்க் காவல்துறையைத் தொடர்புகொண்டுள்ளது.

Related article image
படம்: முத்துராஜேஷ்
Related article image
பொங்கோலில் ஊழியர் தங்கும் விடுதிக்கு அருகே நடைபாதையில் பணம் கிடந்தது - படம்: முத்துராஜேஷ்
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்