சிங்கப்பூரில் தங்குவதற்குச் சிறப்பு அனுமதி - லஞ்சம் கொடுக்க முனைந்த வெளிநாட்டவர்
படம்: கோப்புப் படம்/State Courts in Singapore
காவல்துறை அதிகாரிகளிடம் கையூட்டுக் கொடுத்து, சிங்கப்பூரில் வசிக்க முனைந்த ஆடவருக்கு 11 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஸு ஸிஷன் (Xu Zhishen) வேலை தேடுவதற்காக இவ்வாண்டு மார்ச் மாதம் சிங்கப்பூருக்கு வந்தார்.
அதில் சிரமத்தைச் சந்தித்த அவரிடம் A1 என்பவர் சிங்கப்பூரில் தங்கவும் சட்டவிரோதமாகப் பணம் சம்பாதிக்கவும் வழி சொன்னதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
A1இன் பேச்சைக் கேட்ட ஸு, ஏதாவது ஒரு குற்றம் புரிந்தால் சிங்கப்பூரில் தங்குவதற்குச் சிறப்பு அனுமதி கிடைக்கும் என்று நம்பினார்.
ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி, சைனாடவுனில் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் நடப்பதாகக் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
அந்தச் சந்தேக நபரான ஸு அதிகாரிகளிடம் 119 வெள்ளி ரொக்கத்தைக் கையூட்டாகக் கொடுக்க முனைந்தார்.
பின்னர் கைதான ஸு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
விசாரணைக்காக சிங்கப்பூரில் தங்க அவருக்குச் சிறப்பு அனுமதியும் கிடைத்தது.
அவர் அப்போது A1இன் ஆலோசனைப்படி, பாலியல் வீரிய மருந்துகளைச் சட்டவிரோதமாக விற்கத் தொடங்கினார்.
ஜூலை மாதத்தில் ஸு மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.
அவர் அப்போதுமுதல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
இவ்வாண்டின் முற்பாதியில் மேலும் 4 பேர் ஊழல் குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டனர்.
சீனாவைச் சேர்ந்த அவர்கள் சட்டவிரோதமாகப் பாலியல் வீரிய மருந்துகளையும் விற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.