காந்தி உணவகம் மூடப்படவில்லை, நிர்வாகம் மட்டுமே மாறுகிறது: கடை உரிமையாளர்
காந்தி உணவகம் மூடப்படவில்லை, நிர்வாகம் மட்டுமே மாறுகிறது: கடை உரிமையாளர்
படம்: Google Street View
லிட்டில் இந்தியாவில் செயல்பட்டு வரும் காந்தி உணவகம் மூடப்படுவதாகப் பரவி வரும் செய்தி உண்மையில்லை என்று உணவகத்தின் உரிமையாளர் ராஜ் மோகன் தெரிவித்துள்ளார்.
கடையின் வியாபாரம் எப்போதும் போல் நடந்து கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
உணவகத்தைத் தமது தந்தையால் தொடர்ந்து பார்த்துக்கொள்ள முடியாததால், அதை வேறு நிர்வாகத்திடம் ஒப்படைப்பதாக அவர் தெரிவித்தார்.
காந்தி உணவகம் அதன் செயல்பாடுகளை நிறுத்தப் போவதாக கடந்த சில நாள்களாகச் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிவந்தன.
அதைத்தொடர்ந்து "செய்தி" காந்தி உணவக உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் மோகனை தொடர்பு கொண்டது.
உணவகத்தை நிறுவிய என் தந்தைக்கு 80 வயது. அவர் தொழிலில் இருந்து ஓய்வு பெறுகிறார். அதனால் காந்தி உணவகத்தின் நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உணவகத்தின் பெயரில் எந்த மாற்றமும் இருக்காது, கடையில் இப்போது இருக்கும் ஊழியர்கள், சமையல்காரர்கள் என அனைவரும் தொடர்ந்து வேலை செய்வார்கள்.
வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உணவகத்தை Casuarina Curry நிர்வாகம் ஏற்று நடத்தும்.
அடுத்த வாரம் முதல், உணவகம் புதுப்பிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும்
என்று ராஜ்மோகன் தெரிவித்தார்.
காந்தி உணவகம் சிங்கப்பூரில் சுமார் 47 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
லிட்டில் இந்தியா வட்டாரத்தில் பிரபலமான இந்திய உணவகங்களில் அதுவும் ஒன்று.