"சிங்கப்பூருக்காக உழைக்கிறோம்" - தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டது பாட்டாளிக் கட்சி

படம்: இம்ரான்
பாட்டாளிக் கட்சி அதன் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பொருள், சேவை வரியிலிருந்து விலக்கு, குறைந்தபட்ச சம்பளம், சொத்து வரி போன்ற பலதரப்பட்ட அம்சங்கள் குறித்து அறிக்கை பேசுகிறது.
"சிங்கப்பூருக்காக உழைக்கிறோம்" என்ற கருப்பொருளில் கொள்கை அறிக்கை அமைந்துள்ளது.
அறிக்கை 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவினம் குறித்த கவலைகள், பொருளாதார வளர்ச்சி, சமத்துவம், அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்குவது ஆகியவை வெவ்வேறு பிரிவுகளில் விளக்கப்பட்டுள்ளன.
125 கொள்கைப் பரிந்துரைகளைக் கட்சி முன்வைத்துள்ளது. மேயர் அலுவலகத்தை நீக்குவது, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்குவது, தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கான உரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது ஆகியவை அவற்றில் அடங்கும்.
வேலையில்லாதவர்களுக்கு அனுகூலம், வீடமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு, நீதி அமைப்பு, எரிசக்தி ஆகியவற்றில் தாங்கள் முன்வைத்த 15 கொள்கைகளை அரசாங்கம் ஏதோ ஒரு விதத்தில் ஏற்றுக்கொண்டதாகவும் கட்சி கூறியது.
சிங்கப்பூரில் அடுத்த மாதம் 3ஆம் தேதி பொதுத்தேர்தல்.
வேட்பு மனுத் தாக்கல் தினம் இம்மாதம் 23ஆம் தேதி (புதன்கிழமை).