Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

மாணவர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த பாடங்களைப் பயிற்றுவித்த தமிழாசிரியர்

வாசிப்புநேரம் -

பள்ளிப் பருவத்தில் நீங்கா இடம் பிடித்திருந்த பாடம் ஒன்றை நினைவுகூரும்படி சொன்னால்...

உங்களது மனத்தில் முதலில் தோன்றுவது எது?

அது நிச்சியமாக வழக்கமான பாடங்களைப் போல் இல்லாமல் வித்தியாசமான ஒன்றாகத்தான் இருக்கும்.

கல்வித்துறையில் சேவையாற்றி 54 ஆண்டுகளுக்குப் பின் ஓய்வுபெற்ற திரு. பொன்னழகு மாணிக்கம் அவ்வாறு மாணவர்களின் மனங்களில் நிலைத்திருக்கக்கூடிய தனித்துவமான பாடங்களை நடத்தியுள்ளார்.

அத்தகைய பாடங்களைப் புகட்ட அவர் பாட நூல்களை மட்டும் பயன்படுத்தவில்லை...

அவற்றுக்கும் அப்பால்  உணவு, இசை, கதைகள் எனப் பல்வேறு உத்திகளையும் அவர் கையாண்டுள்ளார்.

நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்த முறை இருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 

அவர்களில் ஒருவர் திரு. பொன் மாணிக்கம். 

தமிழ் முரசு, தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஆகியவை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன.

மொத்தம் 146 ஆசிரியர்கள் விருதுகளுக்கு முன்மொழியப்பட்டனர்.

தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, உயர்கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றியதுடன் திரு. பொன் மாணிக்கம் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் பிரிவுத் தலைவராகத் தமிழாசிரியர்கள் பலருக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் துணைச் செயலாளராக இருந்த அவர், ஆசிரியர்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பயிலரங்குகளுக்கும் கருத்தரங்குகளுக்கும் ஏற்பாடு செய்தார்.

2011ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற பிறகும், ஆசிரியர்ப் பணியைத் தொடர்ந்தார் திரு. பொன் மாணிக்கம். 

2017ஆம் ஆண்டு வரை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்திலும் பின்னர் உயர்நிலைப் பள்ளிகளில் கடந்த ஆண்டு வரையிலும் அவர் பணியாற்றினார்.

ஆசிரியராக அவரது அணுகுமுறை இதுவே.

"மகிழ்வூட்டும் கற்றல் அனுபவத்தை மாணவர்கள் பெறும் வகையில் பாடங்கள் எளிமையாக இருக்கவேண்டும்"

மாணவர்கள் அந்த எளிமையான பாடங்களை நினைவில் வைத்துப் பல ஆண்டுகளுக்குப் பிறகும்  நினைவுகூர்ந்ததைத் திரு. பொன் மாணிக்கம் சுட்டினார். 

தொடக்கப்பள்ளி முதல்-நிலையில் படிக்கும் மாணவர்களுக்கு அவர் ஒரு முறை அறுசுவை குறித்து பாடம் நடத்தியிருந்தார்.

அதில் திரு. பொன் மாணிக்கம் சுவைகளைப் பற்றி மட்டும் எடுத்துரைக்கவில்லை.

ஒவ்வொரு சுவையையும் வெளிப்படுத்தும் உணவுப் பொருள்களைக் கொண்டுவந்தார். அனைவரையும் அவற்றைச் சுவைக்கவைத்தார்.

"'ஆசிரியர் எனக்கு அது இன்னும் நினைவில் உள்ளது. மறக்கமுடியாது' என்று முன்னாள் மாணவர் ஒருவர் பல ஆண்டுகளுக்குப் பின் கூறியது எனக்கு மகிழ்ச்சி அளித்தது,"

"ஆசிரியருக்கு இதைவிட வேறு என்ன வேண்டும்? ஒன்று  மாணவர்கள் நம்மை மறந்துவிடாமல் நம்மைத் தேடிவந்து பேசுவது. இன்னொன்று  நாம் கற்றுக்கொடுத்த பாடம் ஒரு வகைத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிவது,"

என்று திரு. பொன் மாணிக்கம் தெரிவித்தார்.

இவ்வாறு தமிழாரிசியராகப் பணியாற்றியதில் பெருமிதம் கொள்கிறார், மனநிறைவு அடைகிறார், திரு. பொன் மாணிக்கம்.

வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற மற்றொருவர் திரு சாமிக்கண்ணு சிதம்பரம். அவரது பயணம் குறித்து மற்றொரு தொகுப்பில் பார்ப்போம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்