முத்திரைபதித்த முன்னோடிகள்: சிங்கப்பூர் இந்தியச் சமூகத்திற்கு வாரி வழங்கிய திரு.பி.கோவிந்தசாமி பிள்ளை
சிங்கப்பூர் இந்தியச் சமூகத்திற்கு வாரி வழங்கிய தலைவர்களுள் திரு பி. கோவிந்தசாமி பிள்ளைக்குத் தனி இடம் உண்டு. சிறந்த வர்த்தகரான அவர் கொடை வள்ளலாகவும் திகழ்ந்தவர்.

படம்: NAS, MITA
சிங்கப்பூர் இந்தியச் சமூகத்திற்கு வாரி வழங்கிய தலைவர்களுள் திரு பி. கோவிந்தசாமி பிள்ளைக்குத் தனி இடம் உண்டு. சிறந்த வர்த்தகரான அவர் கொடை வள்ளலாகவும் திகழ்ந்தவர்.
1905ஆம் ஆண்டு கப்பல் மூலம் தஞ்சோங் பகாரை வந்தடைந்தார் திரு.கோவிந்தசாமி.
பதின்ம வயதில் சிங்கப்பூருக்கு வந்த அவர், வேலை தேடி அலைந்தார். உடனடியாகக் கிட்டவில்லை. கடைசியாக எண் 50 சிராங்கூன் ரோட்டில் இருந்த மளிகைக் கடையில் வேலை கிடைத்தது.
கடுமையான வேலை. அல்லும் பகலும் அயராது உழைக்க வேண்டும். சம்பளம் கிடையாது. ஆனால், சாப்பாடும், தங்குமிடமும் இலவசம். தயங்காமல் ஏற்று, தொழில் நுணுக்கங்களைக் கற்றுகொண்டார்.

1929ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர், 15 வயது பக்கிரி அம்மாளைத் திருமணம் முடித்தார். அதே ஆண்டு, சிங்கப்பூருக்குத் திரும்பினார். அவர் வேலை செய்த மளிகைக் கடை உரிமையாளர் காலமானதால் அந்தக் கடை விற்கப்பட்டு விட்டது. வேலையை இழந்தார்.
நெருக்கடியான அந்த நேரத்தில், சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்தினார் திரு. கோவிந்தசாமி. அப்போது கடன் கொடுப்போராக விளங்கிய செட்டியார் சமூகத்தவரிடம், 2,000 வெள்ளி கடனாகப் பெற்று சொந்தத் தொழிலைத் தொடங்கினார். மசாலா பொருள்கள், எண்ணெய், தானியங்கள் முதலியவற்றை அவர் விற்பனை செய்தார். தொழில் சிறப்பாக நடந்தது.

ஆதாயம் பெருகப் பெருக சொத்துச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினார். அதே நேரத்தில் துணிக் கடைகள், மாவு, மசாலா மில் ஆகிய தொழில்களிலும் ஈடுபட்டார். அவரின் PGP சேலைக் கடை மக்களிடையே பிரபலமாக இருந்தது.
திரு. கோவிந்தசாமி, 1963ஆம் ஆண்டு வர்த்தகத்திலிருந்து ஓய்வு பெற்றார். குடும்பத் தொழிலைப் பிள்ளைகளிடம் ஒப்படைத்தார். அதன் மதிப்பு 3 மில்லியன் வெள்ளி. 1980ஆம் ஆண்டு 93வயதில் மாரடைப்பால் காலமானார் திரு. கோவிந்தசாமி.

1960களில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் மறுசீரமைப்புப் பணிகளுக்கான நன்கொடையை அவர் வழங்கினார். அங்கு திருமண மண்டபம் கட்டுவதற்கும் அந்த நன்கொடை உதவியது.
சிங்கப்பூரில் கட்டப்பட்ட முதல் இந்தியத் திருமண மண்டபங்களில் அதுவும் ஒன்று.

அவரின் நினைவாக அதற்கு PGP திருமண மண்டபம் என்று பெயர் சூட்டப்பட்டது. 1965ஆம் ஆண்டு, ஜூன் 19ஆம் தேதி, சிங்கப்பூரின் முதல் அதிபர் யூசுஃப் இஷாக் அந்த மண்டபத்தை அதிகாரபூர்வாகத் திறந்துவைத்தார்.
திரு. கோவிந்தசாமி, இந்தியச் சமூகத்துக்கும், சிங்கப்பூருக்கும் ஆற்றிய பணிகளை அங்கீகரிக்கும் வகையில் 2001ஆம் ஆண்டு, சிங்கப்பூர் அஞ்சலகம் நினைவு அஞ்சல்தலையை வெளியிட்டது.

அண்மையில் சிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு நிறைவு அனுசரிப்பிற்குச் சிறப்புச் சேர்க்கும் வண்ணம் புதிய 20 வெள்ளி பணநோட்டு வெளியிடப்பட்டது. அந்தப் பணநோட்டில் திரு. கோவிந்தசாமி பிள்ளை இடம்பெற்றுள்ளார்.