Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

Grab Quiet Ride - பேச வேண்டாமே எனும் சிலர்... பேசாமல் இருப்பது அவசியமா எனக் கேட்கும் வேறு சிலர்...

வாசிப்புநேரம் -
தனியார் வாடகைக் கார் நிறுவனமான Grab, Quiet Ride என்னும் 'சத்தமற்ற' புதிய பயண வசதியை இவ்வாரம் அறிமுகம் செய்துள்ளது.

மக்கள் சிலர் இதனை விரும்பிக் கேட்டதாகவும், அவர்களது தேவைக்கேற்ப இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் Grab தனது Facebook பக்கத்தில் தெரிவித்திருந்தது.

Quiet Ride என்றால் என்ன?

பயணிகள் குறைந்தபட்ச உரையாடலோடு பயணம் செய்ய விரும்பினால், இந்த வசதியைத் தேர்ந்தெடுக்கலாம். இதற்குக் கட்டணம் ஏதுமில்லை.

ஓட்டுநருக்கு உடனடியாக அந்த அறிவிப்பு சென்றுசேரும்; ஓட்டுநர் பயணியுடன் அநாவசியமாக எந்த உரையாடலிலும் ஈடுபடமாட்டார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Quiet Rideஐ பற்றி மக்களும் ஓட்டுநர்களும் என்ன நினைக்கிறார்கள்? விவரங்களைத் திரட்டியது 'செய்தி'.

"அமைதியை விரும்புபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்"

"இது தனிநபரைப் பொருத்துள்ளது. அமைதியை விரும்புபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். டாக்சியில் பயணம் செய்யும்போது சிறிதளவு 'me time' எனப்படும் சொந்த நேரம் கிடைக்கிறது.

தனிமையில் இருக்கும்போது மனத்தை ஒருநிலை படுத்திக்கொள்ள முடிகிறது. அதோடு களைப்பாக இருக்கும் பட்சத்தில் ஒரு குட்டித் தூக்கம் கூட போடலாம்," என்கிறார் ஏஞ்சலினா (Angelina).

அப்துல் மலிக் (Abdul Malik) என்பவர் "இதை வரவேற்கிறேன். தேவையில்லாமல் இனிப் பேச வேண்டாம்," என Grab Facebook பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

'இது அநாவசியமானது'

"எனக்குப் பேச நேரமில்லை என்று நேரடியாக ஓட்டுநரிடம் கூறிவிடலாமே. எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும் கூறலாமே! செயலியின் மூலம் தெரிவிப்பதற்கு அவசியம் என்ன?" என வினவினார் ஷர்மிளா ஜோஸ் (Sharmila Jose).

ஓட்டுநர்களுடன் பேசுவது உற்சாகத்தை அளிப்பதாகவும் அவர் சொன்னார்.

"அமைதியாக டாக்சியை ஓட்டும்போது ஓட்டுநருக்குத் தூக்கம் வரலாம்; அவரை விழிப்புடன் வைத்திருக்கப் பேசுவது நல்லது தானே," என ஏண்ட்ரு (Andrew) என்பவர் Facebook பக்கத்தில் கூறியிருந்தார்.

பேசவேண்டாம் என்று சொல்லக் கூடவா செயலியைப் பயன்படுத்தவேண்டும் என்று இணையவாசிகள் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

"பயணிகளுடன் பேசும்போது சலிப்பு மறைகிறது"

டாக்சியை ஓட்டும்போது மக்கள் தொடர்ந்து உரையாட முன்வந்தால் நல்லது எனச் சொல்கிறார் பகுதி நேர ஓட்டுநராக வேலை செய்யும் திரு ஃபூ.

16 மணி நேரம் வரை டாக்சியை ஓட்டும்போது சலிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. பயணிகளுடன் பேசும்போது அந்தச் சலிப்பு மறைகிறது என்றார் அவர்.

"சில பயணிகள் வாழ்க்கையில் நடக்கும் சிக்கல்களைப் பற்றிப் பேசுவர். அவர்கள் பேசத் தொடங்கினால், மகிழ்ச்சியுடன் தொடர்வேன்," எனத் திரு ரே சிம் (Ray Sim) Todayயிடம் தெரிவித்திருந்தார்.

"பேச விரும்பும் பயணிகளுடன் நாட்டு நடப்பு, சுவாரஸ்யமான பலவற்றைப் பற்றி பேசலாம். ஆனால் பயணிக்குப் பேச விருப்பம் இல்லை என்றால் அவரைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது," எனத் திரு ராமமூர்த்தி சொன்னார்.

பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தாமல் இருக்கவும் பயணம் சுமுகமாக அமையவும் Quiet Ride துணை புரியும் என்றார் அவர்.

செயலியின் புதிய வசதி குறித்து மாறுபட்ட கருத்துகள்.....

ஆனால் பயணிகளின் விருப்பத்துக்கே முன்னுரிமை என்பதில் டாக்சி ஓட்டுநர்கள் தெளிவாக இருக்கின்றனர்.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்