சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
பெண்களின் தோற்றத்தை விமர்சனம் செய்யும் போக்கை ஏற்றுக்கொள்ளமுடியாது: பாட்டாளிக் கட்சி

படம்: மெலிசா
பெண்களின் தோற்றத்தை விமர்சனம் செய்யும் போக்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று பாட்டாளிக் கட்சியின் திரு ஹர்பிரீட் சிங் தெரிவித்துள்ளார்.
தங்களுக்குத் தெரிந்த வட்டாரத்தில் அதுபோன்ற பேச்சு அடிபட்டால் அதைக் கடுமையாகக் கையாளப்போவதாகச் சொன்னார் திரு ஹர்பிரீட்.
அண்மையில் கட்சியின் புதுமுகமாக அறிமுகமான அலெக்ஸிஸ் டாங்கின் (Alexis Tang) வெளித்தோற்றம் குறித்துப் பலர் பிரசாரங்களிலும் இணையத்திலும் விமர்சனம் செய்கின்றனர்.
அரசியலில் காலடியெடுத்து வைக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காலக்கட்டத்தில் இதுபோன்று பார்ப்பது இளம் பெண்களை எப்படிப் பாதிக்கும்?
'செய்தி' முன்வைத்த கேள்விக்குத் திரு ஹர்பிரீட் சிங்கும் அலெக்ஸிஸ் டாங்கும் பதிலளித்தனர்.
"பெண்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. அதனை மனத்தில் வைத்து கைக்குக் கட்டுப் போடக்கூடாது. கடந்த சில நாள்கள், பொங்கோல் வட்டாரத்தில் உள்ள பல இளம் பெண்கள் முன்வந்து என்னையும் எனது சக வேட்பாளர் ஆலியாவையும் முன்னுதாரணமாகப் பார்ப்பதாகக் கூறியிருக்கின்றனர். எங்களைப் பார்த்து மேலும் பல பெண்கள் அரசியலில் காலடியெடுத்து வைப்பர் என்று நம்புகிறேன்," என்றார் அலெக்ஸிஸ்.
பொங்கோல் Waterway Point அருகே செய்தியாளர்களிடம் பேசியது பாட்டாளிக் கட்சி.
பொங்கோல் குழுத்தொகுதியில் பாட்டாளிக் கட்சியின் சார்பில் திரு ஹர்பிரீட் சிங், அலெக்ஸிஸ் டாங், சிட்டி ஆலியா மத்தார், ஜேக்சன் ஆவ் ஆகிய 4 புதுமுகங்கள் போட்டியிடுகின்றனர்.
அதே குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சார்பில் துணைப்பிரதமர் கான் கிம் யோங், ஜனில் புதுச்சேரி, சுன் ஷுவெலிங், யோ வான் லிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.