சோயா தயிர் தயாரிப்புக் கிடங்கில் ஏராளமான கரப்பான்பூச்சிகள் -Hensin Food நிறுவனத்திற்குத் தடை

படம்: Google Maps
சிங்கப்பூர் உணவு அமைப்பு, Hensin Food நிறுவனத்தின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
உணவு தயாரிக்கப்பட்ட பகுதிகளில் கரப்பான்பூச்சிகள் ஏராளமாக இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தடை விதிக்கப்பட்டது.
151 பாண்டான் லூப்பில் (Pandan Loop) Hensin Food நிறுவனம் அமைந்துள்ளது.
அந்த நிறுவனத்தின் வளாகத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
வளாகம் அழுக்காக இருந்ததாகவும் சரிவரப் பராமரிக்கப்படவில்லை என்றும் அமைப்பு தெரிவித்தது.
அதன்பின் அது நேற்றிலிருந்து (20 ஜனவரி) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதாரத்தை முன்னிட்டு, குறைபாடுகளைச் சரிசெய்யவும் வளாகத்தின் தூய்மையை மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிங்கப்பூர் உணவு அமைப்பு, நிறுவனத்திடம்
அறிவுறுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சோதனை நடத்தப்பட்ட நாள் அன்று தயாரிக்கப்பட்ட சோயா தயிர் (beancurd), சோயா தயிர்க் கட்டி (Tau Kwa) ஆகிய உணவுப் பொருள்களை அப்புறப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது.
சம்பந்தபட்ட உணவுப் பொருள்கள் விநியோகிக்கப்படவோ, விற்கப்படவோ இல்லை என்றும் அமைப்பு தெரிவித்தது.
துப்புரவைச் சரிவரக் கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு 10,000 வெள்ளி வரை அபராதம், 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.