ஹவ்காங் வீட்டில் தீ - 'சிறிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டன'

Facebook/Singapore Civil Defence Force
ஹவ்காங் ஸ்ட்ரீட் 91இல் ஏற்பட்ட தீயில் மூவர் மாண்டனர்.
புளோக் 971இல் இருக்கும் மூன்றாம் தளத்தின் வீட்டில் தீ மூண்டபோது சிறிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அக்கம்பக்கக் குடியிருப்பாளர் ஒருவர் 'செய்தி'யிடம் கூறினார்.
இன்று (9 ஜனவரி) மதியம் 12.30 மணியளவில் காற்றில் ஒருவித வாடை வந்ததாகப் புளோக் 972இல் வசிக்கும் 16 வயது ராகவ் சோலையப்பன் சொன்னார்.
"நான் முதலில் 'யாரோ ஊதுபத்திகளை அதிக அளவில் பயன்படுத்துகிறார் போல' என்று நினைத்தேன். பிறகுதான் நெருப்பு என்று அறிந்தேன்," என்று அவர் கூறினார்.
வசிப்போர் குழு உறுப்பினரான திரு ராகவின் தந்தைக்குத் தகவல் கிடைத்தது.

அவர் இருந்த உரையாடல் குழுவில் உறுப்பினர்கள் தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
பின்னர் புளோக்கிற்கு அருகே தீயணைப்பு வாகனங்களையும் காவல்துறை வாகனங்களையும் கண்டதாகத் திரு ராகவ் சொன்னார்.
புளோக் 971, 972, 973 ஆகியவற்றுக்கு இடையே ஒரு பகுதி மூடப்பட்டதாக அவர் கூறினார்.

"தீயணைப்பாளர்கள் வெகுநேரமாகப் புளோக்கிற்கு வெளியிலிருந்து நீரைப் பாய்ச்சினர். பின்னர்தான் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து தீயை அணைத்தனர்," என்று அவர் கூறினார்.
வீட்டில் நிறையப் பொருள்கள் இருந்ததால் அதற்குள் நுழைவதில் சிரமத்தை எதிர்நோக்கியதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் முன்னர் கூறியிருந்தனர்.
நிலைமை கட்டுக்குள் வரக் கிட்டத்தட்ட 4 மணிநேரம் எடுத்ததாகத் திரு ராகவ் சொன்னார்.
அக்கம்பக்கத்தில் குடியிருக்கும் 30 பேர் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அவர்களில் தம்முடைய குடும்பத்துடன் நெருங்கிப் பழகும் ஒரு குடும்பம் வீட்டிற்கு வந்திருந்ததாகத் திரு ராகவ் கூறினார்.

கட்டடத்துக்குக்கீழ் குடியிருப்பாளர்கள் சிலரும் அருகே உள்ள பள்ளியின் மாணவர்களும் கூடியிருந்தனர்.
தீயணைப்பாளர்கள் சுமார் 3.15 மணிக்குத் தீயை அணைத்தனர்.
வீட்டிலிருந்து ஒரு பூனையும் ஒரு பறவையும் 8 முயல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் Facebook பக்கத்தில் கூறினர்.
தீ எப்படி ஏற்பட்டது என்பதை அவர்கள் தற்போது விசாரிக்கின்றனர்.