Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

பகுதிநேர ஊழியர்கள் குழந்தைகளையும் கவனிக்கலாம்" - தயக்கத்துடன் வரவேற்கும் பெற்றோர்

வாசிப்புநேரம் -

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் வீட்டு வேலைகளைச் சமாளிக்க சிலர் இல்லப்  பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்துவதுண்டு. 

சிலர் பணிப்பெண்களை நிரந்தமாகத் தங்கவைக்கின்றனர். இன்னும் சிலர் குடும்பச் சேவைத் திட்டத்தின்கீழ் (Household Services Scheme) பகுதிநேர ஊழியர்களை நாடுகின்றனர்.

பகுதிநேர ஊழியர்கள் வீட்டைச் சுத்தம்செய்தல், கார் கழுவுதல் முதலிய அடிப்படை வேலைகளைச் செய்துவருகிறார்கள். 

இனி அவர்கள் குழந்தைகளையும் முதியவர்களையும் பராமரிக்க மனிதவள அமைச்சு அனுமதியளித்துள்ளது.

இது ஒரு முன்னோடித் திட்டம் என்றது அமைச்சு. 

திட்டத்தை வரவேற்பதாகப் பெற்றோர் சிலர்  "செய்தி"யிடம் தெரிவித்தனர்.

"பிள்ளைகள் பள்ளிமுடிந்து வீடு திரும்பியதும் அவர்களைப் பராமரிக்கத் திட்டம் உதவும். எனவே இதனைப் பரிசீலிக்க வாய்ப்புண்டு.  குழந்தைப் பராமரிப்பாளரை மட்டும் இனி நம்பியிருக்க வேண்டியதில்லை"

எனக் கூறினார் திருமதி. ரோஸ்.

பகுதிநேரமாக வேலைக்குவரும் ஊழியர்கள் ஓர் இரவு தங்கி பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் வசதி இருந்தால் சிறப்பு என்றார் அவர்.

ஏற்கெனவே வீட்டோடு 2 பணிப்பெண்களை வைத்திருந்த திருமதி. பிரபா எழிலரசன் பகுதிநேரச் சேவையை விரும்புவதாகச் சொன்னார்.

"பகுதிநேர ஊழியர்கள் குழந்தைகளையும்  முதியவர்களையும் பராமரிக்கலாம் என்ற செய்தி மனத்துக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இனி வெளிவேலைகளுக்கு நிம்மதியாகச் சென்றுவரலாம்" 

தெரிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் பகுதிநேர ஊழியர்கள் என்பதால் பிள்ளைகளை அவர்களின் பராமரிப்பில் பயமின்றி விட்டுச்செல்லலாம் என்றும் பெற்றோர் சிலர் தெரிவித்தனர். 

பாதுகாப்பு, ஊழியர்களின் அனுபவம் முதலியவற்றை யோசிக்க வேண்டியிருப்பதாகக் திருமதி. அனிதா கூறினார்.

"அடிக்கடி புதிய முகங்கள் வேலைக்கு வரலாம். இதனால் நிறுவனங்களிடம் இருந்து பாதுகாப்பு உத்தரவாதம் அவசியம் எனக் கருதுகிறேன்"

என்றார் அவர்.

திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு மேலும் அதிகமான சிங்கப்பூரர்கள் தங்களை அணுகியிருப்பதாக நிறுவனங்கள் "செய்தி"யிடம் கூறின. 

"குழந்தைகளையும் முதியவர்களையும் பராமரிக்க அனுபவம் அவசியம். எனவே ஊழியர்களுக்குத் திறன்பயிற்சிகள் கொடுப்பது பற்றிப் பரிசீலிக்கப்படுகிறது"

என SG Cleaning Services Ptd Ltd நிறுவனத்தின் திரு. பிரையன் (Bryan) தெரிவித்தார்.

பகுதிநேரச் சேவைக்கான கட்டணம் குறித்தும் சிலர் தயக்கம் காட்டுவதாக Peoplicity நிறுவனத்தின் திரு. ராய் சொன்னார்.

"பகுதிநேர ஊழியர்கள் குறைந்த வருமானத்தில் ஒரே வீட்டில் அதிக நேரம் செலவிட முடியாது. அது சரிப்பட்டு வராது"

என்றார் அவர். 

தற்போதைக்கு அடிப்படை வேலைகளுக்கு மட்டும் நாளொன்றுக்கு 30 வெள்ளிவரை கட்டணம் விதிக்கப்படுவதாக நிறுவனங்கள் கூறின.

திட்டத்தில் பங்கேற்கும் 25 நிறுவனங்களின் பட்டியல் மனிதவள அமைச்சின் இணையத்தளத்தில் உள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்