இணையத்தில் சட்டவிரோதச் சுகாதாரப் பொருள்கள் - சுமார் 1,000 பதிவுகள் நீக்கப்பட்டன: HSA
படம்: Health Sciences Authority
சுகாதார அறிவியல் ஆணையம் (HSA), மின் வணிகத் தளங்களிலும் சமூக ஊடகத் தளங்களிலும் விற்கப்பட்ட சட்டவிரோதச் சுகாதாரப் பொருள்கள் தொடர்பில் சுமார் 1,000 பதிவுகளை நீக்கியுள்ளது.
அவற்றில் ஏறத்தாழ 82 விழுக்காட்டுப் பதிவுகள் கண் ஒட்டுவில்லை சம்பந்தப்பட்டவை.
மார்ச் 10ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இரண்டு வாரச் சோதனையில் அது கண்டுபிடிக்கப்பட்டது.
90 நாடுகள் பங்கேற்ற அந்தச் சோதனையை அனைத்துலகக் காவல்துறை (Interpol) ஒருங்கிணைத்தது.
மருத்துவர் பரிந்துரையுடன் மட்டும் பயன்படுத்தக்கூடிய சருமக் களிம்புகள் (cream), பாலியல் மேம்பாட்டுக்கான மருந்துகள், நாசியில் பயன்படுத்தும் தெளிப்பான்கள் (spray) ஆகிய பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
152 விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
சிங்கப்பூர் சோதனைச்சாவடிகளில் 6,641 சட்டவிரோதச் சுகாதார பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றில் 88 விழுக்காட்டுப் பொருள்கள் அஞ்சல் சேவையிலிருந்து கைப்பற்றப்பட்டன.
அந்தப் பொருள்களைப் பயன்படுத்துவதால் பல பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று ஆணையம் எச்சரித்தது.
சட்டவிரோதச் சுகாதார பொருள்களை இறக்குமதி செயவது, உற்பத்தி செய்வது அல்லது விநியோகிப்பது ஆகிய குற்றத்திற்கு 3 ஆண்டுவரை சிறைத்தண்டனை அல்லது 100,000 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.