சிங்கப்பூர் அதன் முக்கிய திறன்களைக் கொண்டு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவேண்டும்: துணைப் பிரதமர் ஹெங்
சிங்கப்பூர் அதன் முக்கிய திறன்களைக் கொண்டு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவேண்டும்: துணைப் பிரதமர் ஹெங்

(கோப்புப் படம்: Mediacorp)
சிங்கப்பூர் அதன் முக்கிய திறன்களைக் கொண்டு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் கூறியுள்ளார்.
சிங்கப்பூரர்களின் ஒற்றுமை, தனிப் பாதையை உருவாக்குவதற்கான புத்தாக்கத் திறன், சமூகப் பிணைப்பு ஆகியவை அதில் அடங்கும் என்றார் அவர்.
அத்தகைய இலக்கை அடைய கடின உழைப்பும் தொடர் கடப்பாடும் அவசியம் என்று திரு. ஹெங் குறிப்பிட்டார்.
ஒற்றுமையை வலுப்படுத்த வேற்றுமையிலும் நல்லிணக்கத்தைப் பேணவேண்டும்.
புத்தாக்கத் திறனை வளர்க்க, அனைத்துலக ரீதியில் திறந்த மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கவேண்டும்.
சமூகப் பிணைப்பை வலுப்படுத்த ஒவ்வொருவரும் அவரவர் பங்கை ஆற்றத் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று திரு. ஹெங் அறிவுறுத்தினார்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த NUS115 Distinguished Speaker எனும் நிகழ்ச்சியில் திரு. ஹெங் பேசினார்.
இனம், சமயம் தொடர்பான விவகாரங்கள்மீது சிங்கப்பூரர்கள் ஆழமான அக்கறை கொண்டுள்ளது மனநிறைவளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தகைய விவகாரங்கள் குறித்து வெளிப்படையாகவும் யார் மனதையும் புண்படுத்தாத வகையிலும் கலந்துரையாடவேண்டும் என்றார் அவர்.