உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மின்தடையால் நெரிசல் ஏற்படவில்லை - ICA
This audio is generated by an AI tool.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் மின்தடையால் ஜொகூர் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக வெளிவந்த தகவலைக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) மறுத்துள்ளது.
நேற்று சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது ஏற்கனவே திட்டமிடப்பட்ட மின்சார மேம்பாட்டுப் பணிகள் நடந்துகொண்டிருந்ததாக ஆணையம் சொன்னது.
மலேசியா பக்கம் பாலத்தில் இரு வாகனங்கள் பழுதாகியிருந்ததும் ஜொகூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதற்குக் காரணம் என்று அது கூறியது.
நேற்று மதியம் தொடங்கிய போக்குவரத்து நெரிசலுக்கு உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் ஏற்பட்ட பெரிய அளவிலான மின்தடை காரணம் என்று மலேசிய செய்தித்தாள் The Star தெரிவித்தது.
மின்தடை ஏதும் ஏற்படவில்லை என்று ஆணையம் CNA-யிடம் சொன்னது.
காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை பழைய உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் பணிகள் நடந்ததாக அது குறிப்பிட்டது.
அது வழக்கமாக லாரிகள் செல்லும் பாதை.
அங்கு மாலை 4 மணிக்குச் செயல்பாடுகள் தொடங்கிவிட்டன.
மாலை சுமார் 4.30 மணிக்கும் 6.30 மணிக்கும் பாலத்தில் இரு லாரிகள் பழுதாகியிருந்தன.
முதல் லாரி இரவு 9.50 மணிக்கும் இரண்டாவது லாரி இன்று அதிகாலை 12.22 மணிக்கும் அகற்றப்பட்டன.
மாலை உச்ச நேரம் என்பதால் நெரிசல் அதிகமானதாக ஆணையம் கூறியது.