Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

'வெற்றிகளைவிடத் தவறுகளே அதிகப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும்' - சிங்கப்பூர்ப் பனிச்சறுக்கு ஹாக்கி வீரர்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் தேசிய ஆண்கள் பனிச்சறுக்கு ஹாக்கி அணி முதல்முறையாக 2022 அனைத்துலகப் பனிச்சறுக்கு ஹாக்கி சம்மேளனத்தின் 20 வயதுக்குக்கீழ் உள்ளவர்களுக்கான ஆசிய, ஓஷெனியா (Oceania) வெற்றியாளர் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளது.

போட்டி இம்மாதம் 25ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை தாய்லந்துத் தலைநகர் பேங்காக்கில் நடைபெறவுள்ளது.

சிங்கப்பூர் அணி ஹாங்காங், இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சந்திக்கும்.

அந்த 20 பேர்கொண்ட அணியில் 16 வயது முத்துக்குமார் கார்த்திகேயனும் உள்ளார்.

அவர் 9 வயதிலிருந்து பனிச்சறுக்கு ஹாக்கி விளையாடி வருகிறார்.

சிறிய வயதிலேயே அந்த விளையாட்டில் ஆர்வம் எப்படி வந்தது?

"8 வயதில் பனிச்சறுக்கு வகுப்புகளுக்குச் சென்றபோது வகுப்புகள் முடிந்ததும் மற்றவர்கள் பனிச்சறுக்கு ஹாக்கி விளையாடுவதைப் பார்த்தேன்."

"அந்த விறுவிறுப்பான ஆட்டமுறை என்னை மிகவும் கவர்ந்தது. அதன் மீதான ஆர்வமும் அதிகரித்தது. அதிலிருந்து பனிச்சறுக்கு ஹாக்கி வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினேன்."

 

(Joanna Tan)

விளையாட்டு, படிப்பு... இரண்டையும் சமாளிப்பது எப்படி?

பனிச்சறுக்கு ஹாக்கி பயிற்சிகளும் நட்புமுறையான போட்டிகளும் பெரும்பாலும் இரவில்தான் நடைபெறும். 

அதில் முழுக் கவனம் செலுத்தப் பள்ளி முடிந்து வீடுதிரும்பிய உடனே வீட்டுப் பாடங்களைச் செய்து முடித்துவிடுவேன். 

என் ஆசிரியர்களும் புரிந்துணர்வுடன் நடந்துகொள்வர். ஏதேனும் புரியவில்லை என்றால் அதை மீண்டும் கற்றுக்கொடுக்கத் தயங்கமாட்டார்கள்.

(Joanna Tan)

பனிச்சறுக்கு ஹாக்கி பற்றி பலருக்கும் தெரியாத ஒன்று?

1920ஆம் ஆண்டு வெயில் கால ஒலிம்பிக் போட்டியில்தான் பனிச்சறுக்கு ஹாக்கி முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.

பிறகு 1924ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அது அறிமுகம் கண்டது.

(Joanna Tan)

உங்கள் கனவு?

சிங்கப்பூரைத் தொடர்ந்து பிரதிநிதிக்க வேண்டும். உலக வெற்றியாளர் போட்டிகளின் முதல் பிரிவு ஆட்டங்களில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும்.

எதிர்வரும் போட்டியில் அடைய விரும்பும் இலக்கு?

வெற்றிதான். அதோடு குழு ஒற்றுமையை மேம்படுத்துவது, தவறுகளைத் தவிர்ப்பதும் இலக்கு.

(Joanna Tan)

மிகப் பெரிய ஆதரவு?

எனது பெற்றோர்கள்தான். ஒவ்வொரு பயிற்சிக்கும் ஆட்டத்திற்கும் என்னை அழைத்துச் செல்வதோடு அது முடியும்வரை அங்கேயே காத்திருப்பார்கள்.

விளையாட்டில் தடம்பதிக்க விரும்பும் இளையர்களுக்குச் சொல்ல விரும்புவது?

முயற்சியைக் கைவிடாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்தால்தான் வெற்றி எவ்வளவு அருகில் இருக்கின்றது என்பதை உணரமுடியும்.

 வெற்றிகளைவிடத் தவறுகள்தான் அதிகப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும்.

போட்டியில் வெற்றிபெற்ற சிங்கப்பூர் தேசிய ஆண்கள் பனிச்சறுக்கு ஹாக்கி அணிக்கும் கார்த்திகேயனுக்கும் வாழ்த்துக்கள்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்