Skip to main content
"எதுவும் ஒரே நாளில் மாறாது; பொறுமை முக்கியம்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

"எதுவும் ஒரே நாளில் மாறாது; பொறுமை முக்கியம்" - ஒரு தந்தையின் அனுபவம்

வாசிப்புநேரம் -
மனோஜோய் (Manojoy)...

வங்காள வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது சிங்கப்பூரர்.

காது கேளாமைப் பிரச்சினையில் இருந்து விடுபட்டு இப்போது இயல்பான வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்.

அதற்கு முக்கிய காரணம் மனோஜோயின் பெற்றோர்;குறிப்பிட்டுச் சொன்னால் அவரது அப்பா ஜோதிமர் மஜும்டர் (Jyothimar Majumdar).

"2 வயது வரை மனோஜோய் பேசவில்லை. அவருக்கு 'Speech Therapy' பயிற்சியைக் கொடுத்தோம். 2 ஆண்டுகள் கடந்தும் பெரிய மாற்றம் இல்லை. மருத்துவரிடம் காண்பித்தோம். அவருக்குக் காது கேட்கவில்லை. அதனால் அவரால் பேச முடியவில்லை என்று கூறினார்கள்" என்றார் திரு மஜூம்.
 
Related article image
அந்தத் தருணம் வாழ்வில் பெரிய இடி விழுந்ததுபோல் உணர்ந்ததாக அவர் 'செய்தி'யிடம் சொன்னார்.

"மனம் தளராமல் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் KK மருத்துவமனையின் உதவியுடன் 'cochlear implant' அறுவை சிகிச்சை செய்யும் முடிவுக்கு வந்தோம்."

வாழ்வில் அதுவே மிகச் சவாலான காலக்கட்டமாக அவருக்கு அமைந்தது.
Related article image
"அறுவை சிகிச்சை செய்யும்போது பக்கவாதம் உள்ளிட்ட சில பக்க விளைவுகள் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்தது. ஆனால் ஒரு முடிவு எடுக்கவேண்டும் என்ற கட்டாயமும் இருந்தது. மகனின் எதிர்காலம் கருதி நம்பிக்கையோடு முதல் அடி எடுத்து வைத்தேன்" என்றார் திரு மஜூம்.
"எதுவும் ஒரே நாளில் மாறிவிடாது; மாறிவிடும் என்று எதிர்பார்க்கவும் கூடாது. அனைத்துக்கும் பொறுமை மிக முக்கியம் என்பதை மனோஜோய் வழி கற்றுக்கொண்டேன்"

என்றும் அவர் சொன்னார்.

தாமும் மனைவியும் மகனுக்காகச் செய்த முயற்சிகள் தியாகம் அல்ல; மாறாக அன்றாட வாழ்வில் செய்துகொண்ட சின்னச் சின்ன மாற்றங்கள் மட்டும்தான். 

ஆனாலும் அது மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்தன என்றார் திரு மஜூம்.

Related article image
"மகனுக்கு ஒரு சொல்லைக் கற்றுக்கொடுக்க ஒருமுறை அல்ல மாறாக 100 முறையாவது சொல்ல வேண்டும்; அதனைக் கண்ணில் காட்ட வேண்டும். உதாரணத்துக்கு 'tunnel' என்ற சொல்லைக் கற்றுக்கொடுக்க சாலையில் சுரங்கம் உள்ள பகுதிக்கே அவரைக் காரில் அழைத்துச்சென்றுள்ளேன். இப்படிச் செய்தால் அவர் பேசக் கற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கைதான். அந்த முயற்சிகள் எதுவும் வீண்போகவில்லை. இப்போது நினைத்தால் அது கடினமாகவும் தெரியவில்லை" என்று திரு மஜூம் கடந்துவந்த பாதைகளைப் பகிர்ந்துகொண்டார்.
 
Related article image
இதற்கிடையில் குடும்பத்தின் அன்பும் ஆதரவும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்கிறார் மகன் மனோஜோய்.

பேசுவதற்குச் சிரமப்பட்ட தமக்கு முகம் சுளிக்காமல் அனைத்தையும் கற்றுக்கொடுத்த பெற்றோருக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அப்பாதான் தமது "ஹீரோ" என்று குறிப்பிட்ட மனோஜோய் எதிர்காலத்தில் கைத்தொலைபேசி விளையாட்டுச் செயலிகளை உருவாக்கவும் சொந்தத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தவும் இலட்சியம் கொண்டுள்ளார்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்