இந்தியாவும் சிங்கப்பூரும் வேற்றுமையில் ஒற்றுமை காணமுடியும்: அதிபர் தர்மன்

இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன; இருப்பினும் ஒன்று மற்றதன் வளர்ச்சியை முழுமையாக்குகின்றன என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் கூறியிருக்கிறார்.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நேற்றிரவு இந்திய அதிபர் திரௌபதி முர்மு திரு தர்மனுக்கு விருந்தளித்துக் கௌரவித்தார். நிகழ்வின்போது சிங்கப்பூர் – இந்திய உறவின் 60 ஆண்டு நிறைவைக் குறிக்கும் சின்னம் வெளியிடப்பட்டது.
நிகழ்வில் பேசிய திரு தர்மன், இந்தியாவும் சிங்கப்பூரும் தங்களுக்கு இடையிலான வேற்றுமைகளைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வழிகளைக் கண்டறிந்திருப்பதாய்ச் சொன்னார்.
பரஸ்பர மரியாதையுடனும் புரிந்துணர்வுடனும் நடைமுறைக்கு ஏற்ற தீர்வுகளைக் கண்டறியும் வழிகளை இரு நாடுகளும் அறிந்திருப்பதாய் அதிபர் குறிப்பிட்டார்.
இந்தியா எதிர்காலத்தில் அதிவேகமாக வளர்ச்சி காணும் இலக்கைக் கொண்டுள்ளது. அதில் அங்கம் வகிக்கவும் முதலீடு செய்யவும் சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளது என்றார் அதிபர். இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் புரிந்த சாதனைகளைக் குறிப்பிட்டார் திரு தர்மன்.
பொருளாதார வளர்ச்சி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்போரின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்தது, மின்னிலக்க உருமாற்றம் முதலியவற்றை அவர் குறிப்பிட்டுச் சொன்னார்.
அதிபர் தர்மன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேசினார்.
நேற்று காலை திரு தர்மனுக்கு ராஷ்டிரபதி பவனில் சடங்குபூர்வ வரவேற்பளிக்கப்பட்டது. இந்தியாவின் நிதி, போக்குவரத்து, ரயில்வே துறை அமைச்சர்களுடன் திரு தர்மன் பேச்சு நடத்தினார்.