அமெரிக்க சீன உறவு - முக்கிய அம்சம்
அமெரிக்க சீன உறவு, இந்த வட்டாரத்தில் நிலைத்தன்மையையும் நீடித்த வளர்ச்சியையும் உறுதிசெய்வதற்குத் தேவையான புதிய கட்டமைப்பின் முக்கிய அம்சமாக விளங்கும்.
அமெரிக்க சீன உறவு, இந்த வட்டாரத்தில் நிலைத்தன்மையையும் நீடித்த வளர்ச்சியையும் உறுதிசெய்வதற்குத் தேவையான புதிய கட்டமைப்பின் முக்கிய அம்சமாக விளங்கும். தென்கிழக்காசிய ஆய்வுக் கழகம் இன்று நடத்திய வட்டாரக் கருத்தரங்கில் பொதுத் தூதரும் வெளியுறவு அமைச்சின் கொள்கை ஆலோசகருமான திரு. பிலஹரி கௌசிகன் அதனை வலியுறுத்தினார்.
அரசதந்திரிகள், கல்வியாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட நாநூறு பேர் கருத்தரங்கில் கலந்துகொண்டனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகியவற்றுக்கிடையிலான போட்டியும் தென்கிழக்காசியா மீதான அதன் தாக்கம் பற்றியும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
அந்த மூன்று நாடுகளும் முக்கிய சக்திகள் என்றும் அவற்றைப் புறக்கணிக்க முடியாது என்றும் திரு. கௌசிகன் கூறினார். கிழக்காசியாவில் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அவற்றுக்கு முக்கியப் பங்குண்டு என்றார் அவர். சீனாவின் நடவடிக்கைகள் அதன் அண்டை நாடுகளிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தலாம். அனைத்துலகச் சட்டத்துக்குப் பதிலாக வரலாற்று உரிமைகளை வைத்து, கிழக்கு, தென் சீனக் கடல்களில் சீனா தனது உரிமைகளை வரையறுப்பதாகத் திரு. கௌசிகன் கூறினார்.
நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்க ஆசியான் நாடுகளுடன் இருதரப்புப் பேச்சு நடத்த சீனா தயார் என்று அந்நாட்டின் சார்பில் கருத்தரங்கில் கலந்துகொண்ட பேராசிரியர் Shi Yin Hong தெரிவித்தார். உறவுகளைச் சீர்படுத்த மேலும் கோட்பாடுகள் வரையப்படுவது அவசியம் என்று கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.