Skip to main content
"பிறரைப் படிக்கவைத்து அழகு பார்த்தார்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"பிறரைப் படிக்கவைத்து அழகு பார்த்தார்" - ஜோதி ஸ்டோரின் திரு ராமச்சந்திரா கல்வி மீது கொண்ட பேரார்வம்

வாசிப்புநேரம் -
ஜோதி ஸ்டோர் புஷ்பக்கடையின் நிறுவனர் திரு முருகையா ராமச்சந்திரா நேற்றிரவு காலமானார்.

அவருக்கு வயது 93.

தற்போது கடையை வழிநடத்தும் அவரது மகன் திரு ராஜகுமார் சந்திரா 'செய்தி'யிடம் மனம்விட்டுப் பேசினார்.

தமது தந்தை திறமைசாலி என்றும் கணக்கில் அவருக்கு ஈடு இணையில்லை என்றும் அவர் கூறினார்.

"பிறரைப் படிக்கவைத்து அழகு பார்த்தார்"

"படிக்காத குறை மட்டும் தான் என் தந்தையின் மனத்தை எப்போதும் உறுத்தியது. இளம் வயதில் அவருக்கு வசதி வாய்ப்புகள் இல்லை. நல்ல நிலைமைக்கு வந்த பின்பு, என்னையும் எனது 3 அக்காக்களையும் படிக்க வைத்துப் பட்டதாரிகள் ஆக்கி அழகு பார்த்தார். எங்களை மட்டுமல்ல வசதி குறைந்தவர்களைப் படிக்க வைப்பதில் அவர் அதிக ஆர்வம் காட்டினார்,”

இந்தியாவில் இளம் பெண்களுக்காகவே அவர் பள்ளிகளைக் கட்டினார் என்றார் திரு ராஜகுமார்.

ஊழியர்களைக் கைதூக்கிவிடவேண்டும் எனும் நல்லெண்ணம்

தமது கடையில் வேலை செய்த பலர் சொந்தத் தொழிலை ஆரம்பித்தபோது திரு ராமச்சந்திரா அதனை முழுமனத்தோடு ஏற்றுக்கொண்டார்.

வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என நினைத்த பல ஊழியர்களைக் கைதூக்கிவிடவேண்டும் எனும் நல்லெண்ணம் அவருக்கு இருந்தது.

இந்தியச் சமூகத்திற்குப் பெரும்பணி

"எனது தந்தை சிங்கப்பூரில் உள்ள பல கோயில்களுக்கு நிதியுதவி வழங்கியிருக்கிறார். சிண்டா, சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை போன்ற அமைப்புகளுக்கும் அவர் ஆதரவளித்திருக்கிறார். இந்தியச் சமூகத்திற்காக அவர் பெரும் பணி ஆற்றினார்," எனத் திரு ராஜகுமார் பெருமைப்பட்டார்.

தந்தையைச் சிறந்த முன்னுதாரணமாகப் பார்த்ததாக அவர் 'செய்தி'யிடம் பகிர்ந்தார்.

திரு ராமச்சந்திரா நிமோனியா (pneumonia) தொற்றுக்குச் சிகிச்சை பெறுவதற்காக மவுண்ட் அல்வேர்னியா (Mount Alvernia) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவரது உயிர் பிரிந்தது.

அவரது நல்லுடல் வரும் ஞாயிற்றுக்கிழமை (22 ஜூன்) மண்டாய் தகனச் சாலையில் தகனம் செய்யப்படும்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்