மறைந்து வரும் பாரம்பரியத் தொழில்கள் - கச்சாங் புத்தே
வறுகடலை வகைகள் உள்ளூர் வழக்கில் கச்சாங் புத்தே என்று அழைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் ஆங்காங்கே சில கடைகளில் கச்சாங் புத்தே விற்கப்பட்டது.
வறுகடலை வகைகள் உள்ளூர் வழக்கில் கச்சாங் புத்தே என்று அழைக்கப்படுகின்றன. ஒரு காலத்தில் ஆங்காங்கே சில கடைகளில் கச்சாங் புத்தே விற்கப்பட்டது.
கச்சாங் புத்தேயைத் தலையில் சுமந்து நடையாய் நடந்து தமிழர்கள் பலரும் விற்று வந்தனர். அப்போது சுமார் 5 கடலை வகைகள் மட்டுமே விற்கப்பட்டன.
அவர்களில் பெரும்பாலானோர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாட்டிலிருந்து 1940-களில் சிங்கப்பூருக்கு வந்தவர்கள்.
நாளடைவில் சைக்கிள் மூலம் கச்சாங் புத்தே மக்களைச் சென்றடைந்தது. காலப்போக்கில் அந்த வியாபாரம் அருகிவிட்டது.
இருப்பினும் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு குடும்பம் சிங்கப்பூரில் வறுகடலை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
சிலிகி ரோட்டில் உள்ள Peace Centre கடைத்தொகுதிக்கு முன்னால் சுமார் 20 ஆண்டுகளாகக் கடலை வியாபாரத்தை நடத்திவருகிறார் 53 வயது திரு. மூர்த்தி.
சிங்கப்பூரில் இருக்கும் கடைசி கச்சாங் புத்தே கடை அவருடையது. 25-க்கும் மேற்பட்ட கடலை வகைகள் அங்கு விற்கப்படுகின்றன.
இவருக்கென்று சில வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
மூர்த்தியின் சித்தப்பா எனக்கு நன்கு அறிமுகமானவர். 1980களில் Ruby திரையரங்குக்கு வெளியே அவர் கடலை விற்று வந்தார். அது பேலஸ்டியரில் (Balestier) அமைந்திருந்தது.
அந்தக் காலத்தில் அங்கு தமிழ்ப்படங்கள் அதிகம் திரையிடப்பட்டன. திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டு கிடைக்கவில்லை என்றால் அவரது கடைக்குச் சென்று கடலை வகைகளை வாங்கித் திருப்தி அடைவேன். இப்போது, அன்றாடம் மூர்த்தியின் கடைக்குச் சென்று கடலை வகைகளை வாங்கிச் செல்கிறேன்.
எனக்கு உப்புப்போட்ட வறுத்த நிலக்கடலை மிகவும் பிடிக்கும்
என்றார் கடையின் அன்றாட வாடிக்கையாளர்களில் ஒருவரான திரு. குமார்.
Peace Centre-உடன் மட்டும் வியாபாரத்தை நிறுத்தி விடாமல் திருமணங்கள், நிறுவன நிகழ்ச்சிகள் போன்ற இடங்களுக்கும் அதை விரிவுபடுத்தியுள்ளார் மூர்த்தி.
மாதம் 600 வெள்ளி வாடகையில் Peace Centre-க்கு முன்னால் கடலை வியாபாரம் செய்யும் மூர்த்திக்கு அவருடைய 50 வயது மனைவியும் பக்கபலமாக இருக்கிறார்.
கச்சாங் புத்தே தொழிலின் வரலாறு பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் 'செய்தி' யுடன் பகிர்ந்துகொண்டார் திரு மூர்த்தி.
நாளை, மறைந்து வரும் பாரம்பரியத் தொழில்கள் வரிசையில் இசைவட்டு, திரைப்பட வட்டு விற்பனை பற்றிப் பார்ப்போம்.