Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"கரகம் கட்டும் கலை அழிந்துவிடக் கூடாது" - உன்னத மரபுடைமை விருது பெற்ற கலைஞர்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் தீமிதித் திருவிழாவில் கரகத்துக்கு இன்றியமையாத இடம் உண்டு.

தலையில் கரகத்தை ஏந்தியவாறு ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து 5 கிலோமீட்டர் பாத ஊர்வலத்தில் ஈடுபடும் தலைமைப் பண்டாரம்தான் பூக்குழியில் முதலில் இறங்குவார்.

அந்தக் கரகத்தை அமைப்பதற்கு தனிச்சடங்கே உள்ளது. 

கரகத்தைக் கட்டுவதே தனிக்கலை

(படம்: NHB)

"நான் ஒவ்வொரு மலருக்கும் அளவு பார்ப்பேன். அது கொஞ்சம் பெரிதாக இருந்தாலும் கரகம் கட்டுவதில் சிரமம் ஏற்படலாம். அருகில் பூ கட்டுபவரையும் வைத்துக்கொள்வேன்," என்றார் 30 ஆண்டு அனுபவம் கொண்ட திரு பாலகிருஷ்ணன்.

தேசிய மரபுடைமைக் கழகத்தின் STEWARDS OF INTANGIBLE CULTURAL HERITAGE அதாவது தொட்டுணர முடியாத பண்பாட்டு மரபுடைமை வழிநடத்துநர் எனும் விருது வழங்கப்படும் நால்வரில் 67 வயது திரு பாலகிருஷ்ணனும் ஒருவர்.

(படம்: NHB)

பார்த்துப் பார்த்துச் செய்யப்படும் நுணுக்கங்கள்

கரகத்தின் உயரம்...பண்டாரத்தின் உடல் வாகு...கரகத்தை அமைக்கும் விதம்...அதன் அழகு...அனைத்திலும் சமநிலை காணவேண்டும்.

கொடியேற்றத்தில் பெரியாச்சி பூஜையிலும் பாத ஊர்வலத்திலும் பண்டாரம் ஆடும்போதும் கரகம் பிரியாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்.

"கரகம் 2 அடி..... ஏற்றவாறு அலங்காரம் செய்யவேண்டும். குடத்தில் அரிசி அல்லது நீருக்கு நடுவில் குச்சி ஒன்று நட்டுவைக்கவேண்டும். அதுதான் முக்கியம். அதைச் சுற்றி வேப்பிலை கட்டிவைக்கப்படுகிறது. பின்னர் அடுக்கு அடுக்காக வெவ்வேறு வண்ணங்களில் பூ...அம்மன் அலங்காரங்கள்," என்று திரு பாலகிருஷ்ணன் சொன்னார்.

(படம்: T.Kavi)

"கரகம் கட்ட ரசனையும் கற்பனையும் வேண்டும்"

1987-இல் கரகத்துக்குப் பின்னால் நடக்கும் தொண்டூழியராகத் தொடங்கி, 2008 முதல் 2018 வரை கரகத் தலைவராகப் பொறுப்பேற்ற அவருக்கு அனைத்து அம்சங்களும் அத்துபடி.

"கரகத்தை எப்படி அழகாகக் கட்டலாம், கரகத்தை ஏந்திச் செல்லும்போது அது எப்படி இருக்கும் என்று யோசிப்பேன். அதை வரைந்து பார்ப்பேன். கரகம் கட்டுவதற்கு ரசனையும் கற்பனையும் வேண்டும். உங்களுக்குத் திருப்தி இருந்தால்தான் மற்றவர்கள் திருப்தியடையலாம்," என்கிறார் இவர். 

(படம்: T.Kavi)

"திருப்திக்கு இணையில்லை"

தீமிதிக்கு ஏந்தும் கரகத்தை வடிவமைக்கக் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகும். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் வேறு என்ன செய்யலாம் என்பதற்கும் திட்டம் இருக்கும்.

"பக்தர்கள் முன்னிலையில் 45 நிமிடங்களுக்குள் திட்டமிட்டபடி கரகத்தை ஒழுங்காக அமைப்பது சவாலாக இருந்தாலும் 'கரகம் அருமையாக உள்ளது' என்று பக்தர்கள் கூறும்போது கிடைக்கும் திருப்திக்கு ஈடுஇணை இல்லை ."  என்று பெருமிதத்துடன் கூறினார் திரு பாலகிருஷ்ணன்.

(படம்: NHB)

கரகம் கட்டும் கலை - இளைய தலைமுறையிடம் செல்ல வேண்டும்

கரகம் கட்டும் கலை என்றுமே அழியக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அவர் இளைய தலைமுறையினரிடம் கலையைக் கொண்டுசெல்கிறார்.

(படம்: NHB)

அவர் பிள்ளைகளுக்குப் பயிலரங்கு நடத்துவதுடன் தொண்டூழியர்களுக்கும் வழிகாட்டுவதுண்டு.

'இளையர்களே இனி தலைமை தாங்கவேண்டும்' என்று திரு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்