கோலாலம்பூர்-சிங்கப்பூர் விமானத்தில் திருட்டு - இருவர் கைது

(படம்: Envato Elements)
விமானத்தில் சக பயணியின் உடைமைகளைத் திருடிய சந்தேகத்தில் சீனாவைச் சேர்ந்த இருவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் திருட்டு நடந்ததாகக் கூறப்படுகிறது.
35 வயது ஆடவர் ஒருவர் ஒரு பெண்ணின் பையிலிருந்து பொருள்களை எடுப்பதை மற்ற இரு பயணிகள் கவனித்தனர்.
விமானம் தரையிறங்கியபின் அந்தப் பெண் பையை எடுப்பதைப் பார்த்தவுடன் ஆடவர் பையின் உரிமையாளர் அல்ல என்பதை அந்த இரு பயணிகள் உணர்ந்தனர். அவர்கள் உடனே காவல்துறையிடமும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகளிடமும் புகார் செய்தனர்.
CCTV காணொளிகளை வைத்து விமானநிலையக் காவல்துறை ஆடவரை அடையாளம் கண்டது.
அவருடன் சேர்ந்து செயல்பட்ட சந்தேகத்தில் ஒரு 40 வயது ஆடவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 169 வெள்ளி மீட்கப்பட்டது. மேலும் அந்தப் பெண் பயணியின் இரண்டு கடன்பற்று அட்டைகளைக் காவல்துறை மீட்டது.
இருவர் மீதும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.