கோவன் இரட்டைக் கொலைச் சம்பவம் - முன்னாள் காவல்துறை அதிகாரி தூக்கிலிடப்பட்டார்

TODAY
சிங்கப்பூரில் கோவன் வட்டாரத்தில் இருவரைக் கொலை செய்த முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி இஸ்கண்டார் ரஹ்மத் (Iskandar Rahmat) என்ற அவர் இருவரைக் கொலை செய்தார்.
65,000 வெள்ளி கடனில் சிக்கிக்கொண்ட இஸ்கண்டார், டான் பூன் சின் (Tan Boon Sin) என்ற ஆடவரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்தார்.
அச்சம்பவத்தில் இஸ்கண்டார் டானை பலமுறை கத்தியால் குத்தியதாகவும் பின்னர் டானின் மகனான சீ ஹோங்கைக் கொலை செய்ததாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
மலேசியாவுக்குத் தப்பிச் சென்ற இஸ்கண்டார் 54 மணிநேரத்தில் பிடிபட்டார். 2015இல் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இஸ்கண்டார் தண்டனைக்கும் தீர்ப்புக்கும் எதிராக 2017இல் மேல்முறையீடு செய்திருந்தார். அது பின்னர் நிராகரிக்கப்பட்டது.
கருணை வேண்டி அதிபருக்கு அனுப்பிய அவருடைய மனுக்களும் மறுக்கப்பட்டன.