Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"ரீங் ரீங்!" - வீட்டுத் தொலைபேசி ஓசை... இன்னும் எவ்வளவு காலத்திற்கு?

வாசிப்புநேரம் -

"1988ஆம் ஆண்டில் முதன்முறையாகச் சிங்கப்பூரில் கைத்தொலைபேசிகள் அறிமுகம் ஆகின..."

"அப்போது நாம் அனைவரும் வீட்டுத் தொலைபேசிகளை அதிகமாகப் பயன்படுத்தினோம். கைத்தொலைபேசிகள் வந்ததும், அது என்னவென்று தெரியவில்லை.... எப்படிப் பயன்படுத்துவது என்பதும் தெரியவில்லை..." என்றார் 87 வயது தேவி.

இன்று அவருக்கும் ஒரு கைத்தொலைபேசி உள்ளது. வெளியே செல்லும்போது அதைப் பயன்படுத்தித் தமது நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் தொடர்புகொள்கிறார்.

(படம்: Pexels)

77 வயதுக் கௌசல்யா, கைத்தொலைபேசியைப் பயன்படுத்துவதில் தமக்கு நம்பிக்கை இல்லை என்றார்.

"வீட்டில் தொலைபேசி இருக்கும்போது எனக்குக் கைத்தொலைபேசி எதற்கு? என் நண்பர்களும் குடும்பத்தினரும் என்னிடம் பேசுவதற்கு வீட்டுத் தொலைபேசியில் அழைப்பார்கள். அவர்களின் அழைப்புக்குப் பதில் இல்லை என்றால் நான் வெளியே சென்றுவிட்டேன் என்று அவர்களுக்குத் தெரியும்" என்றார் அவர்.

(படம்: Pixabay)

"குடும்பத்தினருக்குக் கைத்தொலைபேசி இருக்கும்போது வீட்டுத் தொலைபேசி எதற்கு?" என்று கேட்கிறார் 65 வயது சுந்தரம்.

அனைவரிடமும் கையடக்கத் தொலைபேசிகள் இருப்பதால் தமது வீட்டுத் தொலைபேசியின் சந்தாவை ரத்து செய்தார் அவர்.

கைத்தொலைபேசி இருந்தாலும் வீட்டுத் தொலைபேசி இருப்பது முக்கியம் என்று கூறுகிறார் 60 வயது சசிதரன்.

"சில சமயங்களில் கைத்தொலைபேசி செயலிழந்து போகலாம். அத்தகைய சூழல்களில் வீட்டுத் தொலைபேசி இருப்பது வசதியாக இருக்கும்" என்றார் அவர்.

(படம்: Pixabay)

கைத்தொலைபேசிகள் இருப்பதால் சிங்கப்பூரர்கள் பலர் வீட்டுத் தொலைபேசியைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டார்களா?

வீட்டுத் தொலைபேசிகள் வைத்திருப்போர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருகிறது...

☎️ 2022இன் பிற்பகுதியில்: சுமார் 1.209 மில்லியன் 

☎️ 2022இன் முற்பகுதியில்: சுமார் 1.219 மில்லியன் 

☎️ 2021இல்: சுமார் 1.225 மில்லியன் 

☎️ 2020இல்: சுமார் 1.253 மில்லியன் 

☎️ 2019இல்: சுமார் 1.281 மில்லியன் 

கைத்தொலைபேசிகள் வைத்திருப்போர் எண்ணிக்கை:

📱 2022இன் பிற்பகுதியில்: சுமார் 9.212 மில்லியன் 

📱 2022இன் முற்பகுதியில்: சுமார் 8.662 மில்லியன் 

📱 2021இல்: சுமார் 8.661 மில்லியன் 

📱 2020இல்: சுமார் 8.428 மில்லியன் 

📱 2019இல்: சுமார் 9.077 மில்லியன் 

என்று IMDA இணையத்தளம் குறிப்பிட்டது.

(படம்: Pexels)

இது குறித்து இளைய தலைமுறையினர் என்ன சொல்கின்றனர்?

"அவசரத்துக்கு வீட்டில் தொலைபேசி இருப்பது நல்லது. சில சமயங்களில் கைத்தொலைபேசி அமைதி நிலையில் இருக்கும். அழைப்பு வந்தால் நமக்குத் தெரியாது. ஆனால் வீட்டுத் தொலைபேசியில் அழைப்பு வந்தால் அது வீடு முழுவதும் ஒலிக்கும்" என்று சொல்கிறார் 25 வயது மீரா.

வீட்டில் தொலைபேசி இருந்தும் அதைப் பயன்படுத்துவதில்லை என்று கூறுகிறார் 29 வயது ஷஃபீனா.

"என் கைத்தொலைபேசியைக் காணவில்லை என்று தேடும்போது, அதை அழைக்க மட்டும்தான் நான் என் வீட்டுத் தொலைபேசியைப் பயன்படுத்துகிறேன்" என்றார் அவர்.

புதிய வீட்டுக்குள் குடிபோனதும் வீட்டுத் தொலைபேசியைப் பெறத் திட்டமில்லை என்கிறார் 33 வயது ராஜ்.

"என் மனைவியும் நானும் கண்டிப்பாக அதை அதிகம் பயன்படுத்தமாட்டோம். எதற்கு வீண் செலவு?" என்று கேட்கிறார் அவர்.

கால ஓட்டத்திற்கு ஏற்றபடி தொழில்நுட்பமும் மாறுகிறது.

அதற்கேற்ப நாமும் மாறி வருகிறோம்...

எதிர்வரும் ஆண்டுகளில் "வீட்டுத் தொலைபேசி என்றால் என்ன?" என்ற கேள்வி எழுந்தால்கூட அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை...

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்