Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

கலைத்துறையில் திரு. ரெ. சோமசுந்தரம் ஆற்றிய பங்கை என்றென்றும் நெஞ்சில் சுமந்துகொண்டிருக்கும் ரசிகர்கள்...

வாசிப்புநேரம் -
காலஞ்சென்ற திரு. ரெ. சோமசுந்தரம் சிங்கப்பூர்க் கலைத்துறையின் முன்னோடிக் கலைஞர்களில் ஒருவர்.

அவரைப் பலரும் "சோமு" என்று அன்பாக அழைப்பார்கள்.

அவர் நேற்று (17 மார்ச்) காலமானார். அவருக்கு வயது 75. 

சிங்கப்பூர் இந்தியக் கலைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்கு ஈடுஇணையற்றது.

நடிகர், தயாரிப்பாளர், வானொலித் தயாரிப்பாளர், படைப்பாளர் என்று பல பரிமாணங்களை அவர் ஏற்றுள்ளார்.

ஒவ்வொன்றையும் வெற்றிகரமாக முடித்து மக்களின் மனதில் பிரகாசித்தார்.

அவரின் ரசிகர்கள் கூறுவது...


"கம்பீரமான குரல், அதற்குத் தகுந்த தோற்றம்"

"M.K. நாராயணனின் தயாரிப்பில் 'மஹாபாரதம்' என்ற வானொலி நாடகத்தில் துரியோதனன் கதாபாத்திரத்தில் தோன்றினார் திரு. சோமு. அந்த நிகழ்ச்சியை நான் கேட்டு ரசித்ததுண்டு. பல நல்ல நிகழ்ச்சிகளை மக்களுக்குப் படைத்துவந்தார் திரு. சோமு. மேடை, தொலைக்காட்சி நாடகங்களிலும் அவரின் கம்பீரமான குரலும் தோற்றமும் காதுகளுக்கும் கண்களுக்கும் விருந்தளித்தன."

- திரு. காமாச்சி சுந்தரம்


"பல வீடுகளில் தொலைக்காட்சி இல்லாத காலத்தில் பாடல்களையும் வசனங்களையும் ஒலிபரப்பி எங்களை மகிழ்வித்தார்"

"திரு. சோமு படைத்த 'காட்சியும் கானமும்' என்ற வானொலி நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்தது. அந்தக் காலக்கட்டத்தில் ஒரு சில வீடுகளில் மட்டுமே தொலைக்காட்சி இருந்தது. மற்ற வீடுகளில் வானொலி மட்டுமே இருந்தது. பாடல் ஒலிக்கும் முன்பு அதற்குமுன் இடம்பெறும் வசனங்களையும் ஒலிபரப்புவார் திரு. சோமு. படத்தைக் காண இயலவில்லை என்றாலும் பாட்டும் அது இடம்பெறும் சூழலும் நன்றாகப் புரிந்தது. படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு..."

- திருமதி. நளினி


"சிங்கப்பூரின் ஆகத் திறமைவாய்ந்த கலைஞர்களில் ஒருவர்"

"பல கதாபாத்திரங்களைத் தத்ரூபமாக ஏற்று நடிக்கக்கூடிய சிறந்த உள்ளூர்க் கலைஞர் திரு. சோமு. அவர் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த வானொலிப் படைப்பு 'அடுக்குவீட்டு அண்ணாசாமி'. அதில் அவர் நடித்த நகைச்சுவையான கதாபாத்திரம் மிக சுவாரசியமாக இருந்தது."

- திரு. சசிதரன்


"தீபாவளிக் குதூகலத்தை ஏற்படுத்துவதில் அவரின் நிகழ்ச்சிகளுக்கும் பங்குண்டு"

"திரு. சோமு தீபாவளியை ஒட்டி படைத்த வானொலி நாடகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பண்டிகைக் காலத்தின்போது குடும்பப் பிணைப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் விதத்தில் அத்தொடர்கள் அமைந்தன.அவரின் படைக்கும் பாணியும் பகிர்ந்துகொண்ட விழுமியங்களும் என்னை ஈர்த்தன. ஒவ்வோர் ஆண்டும் அவர் படைக்கும் தீபாவளி நிகழ்ச்சிகளுக்காகக் காத்திருப்பேன்."

- திரு. விக்னேஷ்


"இயல்பான நடிப்பு; மனதைக் கவரும் சிரிப்பு"

"சிறுவயதில் நான் Subramani and friends என்ற நாடகத் தொடரை விரும்பிப் பார்ப்பேன். அதில் சுப்ரமணியின் தாத்தாவாக நடித்தார் திரு. சோமு. அவரின் இயல்பான நடிப்பும் புன்சிரிப்பும் என் மனதைக் கவர்ந்தன. நடிப்பு என்றாலும் அதை அவர் நிஜம்போல் கொண்டுவந்த விதம் எனக்குப் பிடித்திருந்தது."

- குமாரி துர்கா
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்