எதிர்த்தரப்புத் தலைவர் பதவியை அதிகாரபூர்வமாக நிறுவும் முயற்சிகளுக்கு அரசாங்கம் ஆதரவு: அமைச்சர் சான்
This audio is generated by an AI tool.
எதிர்த்தரப்புத் தலைவர் பதவியை அதிகாரபூர்வமாக நிறுவும் கூடுதல் முயற்சிகளுக்கு அரசாங்கம் ஆதரவு அளிப்பதாகப் பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சான் சுன் சிங் (Chan Chun Sing) தெரிவித்துள்ளார்.
எதிர்த்தரப்புத் தலைவரின் பணிகள், பொறுப்புகள், செயல்படும் விதம் ஆகியவை நாடாளுமன்ற நடைமுறைக்கு ஏற்ப இருக்கும் என்றார் அவர்.
அந்தப் பதவியை வகிப்பவரின் அனுபவமும் நடத்தையும் அதில் பங்கு வகிக்கும் என்றும் திரு சான் சொன்னார்.
எதிர்த்தரப்புத் தலைவர் எனும் பதவி ஓரளவுக்குப் புதிதாக இருப்பது அதற்குக் காரணம் என்றார் அவர்.
அந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற நியமன உறுப்பினர் நியோ கொக் பெங் (Neo Kok Beng) கேள்வி எழுப்பியிருந்தார்.
பிரதமர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) சார்பாக அமைச்சர் சான் பதில் அளித்தார்.
எதிர்த்தரப்புத் தலைவர் பொதுவாக முக்கிய எதிர்க்கட்சியின் தலைமைச் செயலாளராக இருப்பார் என்று திரு சான் கூறினார்.
அவர் நேர்மையைக் கடைப்பிடிப்பதுடன் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையையும் மரியாதையையும் பெற்றிருக்கவேண்டும் என்றார் அவர்.
பதவி அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டால் சில நிபந்தனைகள் தெளிவாக நிர்ணயிக்கப்படலாம் என்று திரு சான் கூறினார்.