இந்தோனேசியக் குழந்தைக் கடத்தலில் சிங்கப்பூரைச் சேர்ந்த 4 பேர் மீது சந்தேகம்
படம்: CNA/Wisnu Agung Prasetyo
This audio is generated by an AI tool.
இந்தோனேசியாவில் இயங்கும் குழந்தைக் கடத்தல் கும்பலில் சிங்கப்பூரைச் சேர்ந்த 4 பேர் சம்பந்தப்பட்டிருந்தனர் என்று முக்கிய சந்தேக நபர் ஒருவர் பாண்டுங் (Bandung)நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
குறைந்தது 12 குழந்தைகள் தத்தெடுப்பு என்ற பெயரில் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டதாகக் கும்பல் தலைவர் எனச் சந்தேகிக்கப்படுபவர் கூறினார்.
ஒவ்வொரு குழந்தையும் 17,000 முதல் 21,600 வெள்ளி வரை விற்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
70 வயது லாய் சியூ லுவான் (Lie Siu Luan) என்பவர் குறைந்தபட்சம் 12 குழந்தைகளைச் சிங்கப்பூருக்குக் கடத்தியதாக மே மாதம் நடந்த நீதிமன்ற விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
சிங்கப்பூரைச் சேர்ந்த நான்கு பேர் தத்தெடுப்பு முகவர்களாகச் செயல்பட்டனர் என்று அவர் கூறினார்./p>
தத்தெடுக்க விரும்பும் வாடிக்கையாளர்களைத் தமக்கு அறிமுகம் செய்ததாகவும் அவர் சொன்னார்.
இந்தக் கடத்தல் கும்பல் 2022ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை குறைந்தபட்சம் 34 குழந்தைகளை விற்றதாகக் கூறப்படுகிறது.
தற்போது பாண்டுங்கில் 19 பேர் மீது விசாரணை நடத்தப்படுகிறது.
கடத்தல் கும்பல் எளிதில் பாதிக்கப்படும் நிலையிலுள்ள பெற்றோரை சமூக ஊடகங்கள் மூலம் அணுகுவதாகத் தெரியவந்தது.
பின்னர் போலி ஆவணங்களை உருவாக்கிக் குழந்தைகளைத் தத்தெடுப்புக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.