சிங்கப்பூரின் பொருளியல் எதிர்காலம் சிறப்பாய் இருக்கிறது-அமைச்சர் லிம் ஹுங் கியாங்
அடுத்த சில ஆண்டுகளுக்கு சிங்கப்பூரின் பொருளியல் எதிர்காலம் சிறப்பாய் இருப்பதாக, வர்த்தக தொழில் அமைச்சர் திரு லிம் ஹுங் கியாங் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூர்: அடுத்த சில ஆண்டுகளுக்கு சிங்கப்பூரின் பொருளியல் எதிர்காலம் சிறப்பாய் இருப்பதாக, வர்த்தக தொழில் அமைச்சர் திரு லிம் ஹுங் கியாங்(Lim Hng Kiang) கூறியிருக்கிறார். ஆனால், வரும் ஓரிரு ஆண்டுகளுக்கு நாடு சவால்களைச் சந்திக்கும் என்றார் திரு Lim.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் திரு லிம் ஹுங் கியாங், பிரேடல் ஹைட்ஸ் பகுதிக்கு மேற்கொண்ட முதல் வருகை இது. அந்த வட்டாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை அவர் பாராட்டினார். குடியிருப்பாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையடாலில் சிங்கப்பூரின் அடுத்த 50 ஆண்டுகள் பற்றி பல அம்சங்கள் பேசப்பட்டன.
சிங்கப்பூரின் பொருளியல் பற்றி பேசும்போது, நடுத்தர வருவாய் உள்ள 101 நாடுகளில் உலக வங்கி 2011ல் மேற்கொண்ட ஆய்வைச் சுட்டினார் திரு லிம். 50 ஆண்டுகளில் நடுத்தர வருவாயிலிருந்து உயர்ந்த சம்பள நாடாக முன்னேறிய 13 நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என அவர் குறிப்பிட்டார். சிங்கப்பூரில் மற்ற நாடுகள் தொடர்ந்து முதலீடு செய்கின்றன. உள்ளூர் நிறுவனங்களும் வெளிநாடுகளில் ஆர்வம் காட்டுகின்றன. அதனால் சிங்கப்பூர் தொடர்ந்து 2லிருந்து 4 விழுக்காட்டு பொருளியல் வளர்ச்சி காண முடியும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதேவேளையில் சிங்கப்பூர் இன்னமும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார். இங்கு உருவாக்கப்படும் வேலைகளையும் சிங்கப்பூரர்களின் விருப்பங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றார் அவர்.
இன்றைய நிகழ்ச்சியில் பிரேடல் ஹைட்ஸ் வட்டாரத்தின் வரலாற்றை எடுத்துரைக்கும் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன.
மரபுடைமைக் காட்சியை விரிவுபடுத்தும் திட்டமும் இருப்பதாக ஏற்பாட்டளர்கள் கூறினர்.