Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

'அப்பா, அம்மா இன்றிச் சாதனை எதுவும் சாத்தியம் இல்லை...' - லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற இளம் மருத்துவர்

வாசிப்புநேரம் -

லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் இந்த ஆண்டு மூவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் 28 வயது டாக்டர் ஷாமினி ராதாகிருஷ்ணன். அவர் உபகாரச் சம்பளத்தைக் கொண்டு அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பொதுச் சுகாதாரத் துறையில் முதுநிலைப் பட்டம் பெறவுள்ளார்.

டப்ளின் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு 2020ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நாடு திரும்பினார்.

இங்கு மருத்துவ அதிகாரியாக இருந்தபோது கிடைத்த அனுபவமே பொதுச் சுகாதாரத் துறையைத் தேர்ந்தெடுத்துப் பயில ஊக்குவித்ததாக டாக்டர் ஷாமினி 'செய்தி'யிடம் குறிப்பிட்டார்.

"நான் உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்பு போன்ற
நாட்பட்ட பிரச்சினைகளால் அவதியுறும் பலரைச் சந்தித்தேன்."

"சிங்கப்பூர் ஏற்கெனவே மூப்படையும் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. அதனால் நாட்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் செல்லும்."

குறிப்பாக தெற்காசியர்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என்றார் டாக்டர் ஷாமினி.

அதனால் நோய்த்தடுப்பு மருத்துவம் மிகவும் முக்கியம் என்று அவர் சொன்னார்.

நாட்பட்ட நோய் ஏற்படுவதைத் தடுக்க அல்லது தள்ளிப்போட அது உதவும் என்றார் அவர்.

தற்போது அவர் மருத்துவ நிபுணராகப் பயிற்சி பெறுகிறார்.

பொதுச் சுகாதாரத்தில் முதுநிலைப் பட்டம் பெறுவதன் மூலம் சிங்கப்பூர் மக்கள்தொகையின் சுகாதாரத்தைப் பாதிக்கக்கூடியவை, யார்யார் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

சமுதாயத்திற்குச் சேவை...

டாக்டர் ஷாமினியின் சேவை மருத்துவமனையில் மட்டுமல்ல.

அவர் தனிப்பட்ட முறையிலும் தொண்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக செயின்ட் ஆண்ட்ரூஸ் வெளிநாட்டு
ஊழியர்களுக்கான மருத்துவ நிலையத்தில் சேவையாற்றி வருகிறார்.

சேவை மனப்பான்மைக்கு முக்கியக் காரணம் பெற்றோரே என்று அவர் தெரிவித்தார்.

"இது அனைத்துமே என் அப்பா, அம்மா இன்றி சாத்தியம் இல்லை."

"சிறு வயதிலிருந்தே கடின உழைப்பு, நேர்மை போன்ற பண்புகளை அப்பா புகுத்தினார்."

"அம்மா அறிவியல் சோதனைகளைக் கற்றுக்கொடுப்பார். இயற்கையைப் பற்றிய ஆர்வத்தைத் தூண்டுவார். தொண்டூழியத்திலும் அவருக்கு அதிகம் ஆர்வம் உண்டு."

பெற்றோரின் சேவை மனப்பான்மையும் அறிவியல் மீதான ஆர்வமும் தம்மை மருத்துவத்துறையின் பக்கம் ஈர்த்ததாக
டாக்டர் ஷாமினி கூறினார்.

எதிர்காலத் திட்டங்கள்?

"நிபுணத்துவப் பயிற்சியைத் தொடரவேண்டும்."

"ஆரோக்கியமாக மூப்படைதல், சுகாதாரம் பற்றிய கல்வியறிவு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளச் சிங்கப்பூரின் சுகாதாரம் தொடர்பான அமைப்புகளில் பணியாற்ற வேண்டும்."

நாட்பட்ட நோய் ஏற்படுவதைத் தள்ளிப்போட அல்லது தடுக்க அவற்றுக்கான காரணிகளைக் கண்டறிவது உதவும் என்றார் டாக்டர் ஷாமினி.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்