Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

"ஒவ்வொரு சவாலும் ஒரு வாய்ப்பு; திறந்த மனத்துடன் இருங்கள்" - மீடியாகார்ப்பில் நீண்டகாலச் சேவை விருது பெற்ற திருமதி பவளகாந்தம், திரு நடராசன்

வாசிப்புநேரம் -
"மற்றவர்களுக்காக வேலையை விடாதீர்கள்!. வேலை பிடித்திருந்தால் அதில் நிலைத்திருங்கள்!"

இதுதான் இளையர்களுக்குத் தாம் கூற விரும்பும் ஆலோசனை என்கிறார் சிங்கப்பூரின் மூத்த செய்தியாசிரியர் திருமதி பவளகாந்தம் அழகர்சாமி.
(படம்: மூத்த செய்தியாசிரியர் பவளகாந்தம் அழகர்சாமி)
"எப்போதும் சிறந்த சிந்தனையுடன் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தால் எந்தச் சவாலையும் எளிதாகச் சமாளிக்கலாம்,"

என்பதே தமது ஆலோசனை என்று கூறுகிறார் மூத்த செய்தியாசிரியர் திரு நடராசன்.
 
(படம்: மூத்த செய்தியாசிரியர் நடராசன்)
கடந்த 35 ஆண்டுகளாக ஊடகத்துறையில் கோலோச்சிவரும் இருவருக்கும் மீடியாகார்ப் நிறுவனம் இன்று "35 ஆண்டுகள் நீண்டகாலச் சேவை விருது" வழங்கி கௌரவித்தது.

விருது பற்றிப் பேசிய திருமதி பவளகாந்தம் ....
 
"சவாலான சூழ்நிலையில் கடுமையாக உழையுங்கள். சிறந்த சேவையைக் கொடுங்கள். ஒவ்வொரு சவாலும் ஒரு வாய்ப்பு. அதனைத் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொண்டால் ஏமாற்றம் இருக்காது. சில நேரங்களில் பொறுமை அவசியம். உங்களுக்குக் கிடைக்க வேண்டியது நிச்சயம் உங்களை வந்துசேரும்,"

என்றார்.

1989இல் மீடியாகார்ப்பில் இணைந்த திரு நடராசன்,
"வேலையில் கருத்து வேறுபாடு வருவது வழக்கம். மற்றவர்களின் கருத்துகளைக் கேட்டு அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். ஒருவர் மற்றவரின் அனுபவங்களையும் கருத்துகளையும் மதிக்க வேண்டும்,"

என்றார்.

இந்த 35 ஆண்டுகளில் தயாரிப்பாளர், செய்தியாசிரியர், செய்திப் படைப்பாளர் எனப் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ள திருமதி பவளகாந்தம் மறக்க முடியாத தருணம் பற்றி விவரித்தார்.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி....சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் யூ மறைந்த நாள்...

"துயரச் செய்தி வாசிக்கும்போது உணர்ச்சிவசப்படக் கூடாது என்பது செய்தியாளர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் திரு லீயின் மறைவுச் செய்தியை வாசிக்கும்போது என்னால் அதனைப் பின்பற்றமுடியவில்லை. குரல் தழுதழுத்தது," என்று நினைவுகூர்ந்தார்.

பிறகு திரு லீயின் இறுதிச்சடங்கு குறித்து நேரடி நிலவரம் வழங்கிக்கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் பேச முடியாத அளவுக்குத் தாம் உணர்ச்சிவசப்பட்டதாகவும் திருமதி பவளகாந்தம் சொன்னார்.

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் S.R நாதன் பற்றி 2011ஆம் ஆண்டு 'எதிரொலி' நிகழ்ச்சியில் தாம் படைத்த தொடர் மறக்க முடியாத ஒன்று எனத் திரு நடராசன் நினைவுகூர்ந்தார்.

"திரு நாதன் அப்போது அதிபர் பதவியிலிருந்து விலகும் காலக்கட்டத்தில் இருந்தார். இஸ்தானாவில் அவரைத் திருமதி பவளகாந்தம் பேட்டி எடுத்தார். தொடக்கம் முதல் முடிவு வரை திரு நாதன் தமிழில் கொடுத்த ஒரே பேட்டி என்றால் அதுதான்," என்றார் திரு நடராசன்.

அடையாளம் கொடுத்த மீடியாகார்ப் நிறுவனத்துக்கு இருவரும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்